பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



43

இலக்கணத் தமிழில் பேசிய அடிகளார், சொற்பொழிவில் தூய இலக்கணத் தமிழிலேயே பேசினார் என்று விதந்து சொல்ல வேண்டியதில்லை.

 அடிகளாரின் மணிக்கணக்கான சொற்பொழிவுகளில் - எவ்வளவு நேரம் ஆயினும் கேட்போர்க்கு அலுப்பு ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியுண்டாக்கும் சொற்பொழிவுகளில் இடையிடையே நகைச் சுவையும், இருபொருள்(சிலேடை) நயமும் இடம்பெறத் தவறுவதில்லை. கந்தபுராணத்தில்வள்ளியம்மைத் திருமணப் படலத்தில் உள்ள,
 "ஐயனே அவள் ஆகம் நல் லெழில்
 செய்ய பங்கயத் திருவிற் கும்மிலை 
 பொய்ய தன்றிது போந்து காண்டி நீ 
 கையனேன் இவண் கண்டு வந்தனன்" (62)
 என்னும் பாடல், நாரதர் வள்ளியின் அழகுச் சிறப்பை முருகனுக்கு எடுத்துக் கூறுவதாகும். இப்பாடலில் இறுதியில் உள்ள 'கண்டு வந்தனன்’ என்னும் தொடரில் அடிகளார் இருபொருள் நயம் உள்ளமையைக் கூறி மகிழ்விப்பார். 'கண்டு வந்தனன்’ என்றால், 'வள்ளியை நான் கண்டு வந்தேன்’ என்று நாரதர் கூறிய தாகப் பொருள் கொள்ள வேண்டும். இதையே 'கண்டு உவந்தனன்' என்றும் பிரிக்கலாம். இங்ங்னம் பிரித்தால், நான் வள்ளியைக் கண்டு மகிழ்ந்தேன் (விரும்பினேன்) என்று கூறியதாக முருகன் பொருள் கொண்டால் நம்மேல் சினம் கொள்வாரே என்று நாரதர் அஞ்சி, வள்ளி எனக்கு தாய் போன்றவர் என்னும் கருத்து அமைய, அடுத்த பாடலை, 'தாய தாகும் அத்தையல் முன்னரே' என்று தொடங்கினார். அப்பாடல் முழுதும் வருமாறு:-