பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

வழங்குவார். மற்றவர் சொல்லாது விட்ட கருத்துகளை யும் அறியாத கருத்துகளையும் முடிவுரையில் அடிகளார் எடுத்து விளக்கிக் கூறுவது மிகவும் சிறப்பாயிருக்கும். சொற்பொழிவாளர்கள் தமக்குள் முரண்பட்ட கருத்து களைப் பேசியிருப்பின், அடிகளார் அம்முரண்பட்ட கருத்துகளைத் தொட்டுத் துலக்கி இருசாராரும் அமைதி பெறச் செய்வார்.

 அடிகளாரின் சொற்பொழிவின் சிறப்பைக் கோவை கிழார் ஒரு கட்டுரையில் விளக்கியிருக்கும் பகுதி அப்படியே வருமாறு:-
 "அடிகளைப்போல் பேசும் திறமை வாய்ந்தவர்கள் தமிழ் நாட்டில் வேறொருவர் உண்டோ என்பது ஐயம். மணிக் கணக்காகப் பல நாள்களும் பேசக் கூடிய வன்மை எவர்க்கு உளது! பல்லாயிரக் கணக்கான மக்களும் வாய்திறந்த வண்ணமாக உட்கார்ந்து கேட்கும் படியாகப் பெருஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். கற்றோரும் கல்லாதாரும் பெரும் பயனை அடைந்தே செல்வார்கள். அவர்பேச்சில் வெறும் பேச்சுகள் இல்லாமல் பொருள் வாய்ந்த பேச்சுகளாகவே காண்போம். கோவையில் "வள்ளித் திருமணம்" என்ற பொருள் பற்றி மூன்று மணி நேரம் மூன்று நாள்கள் பேசினார்கள். ஆயினும், கூறியது கூறல் என்பது சிறிதேனும் இருக்கவில்லை. அப்படியே 'சீதா கல்யாணம்’ என்ற பொருளை விளக்கினார்கள். ஈசுவர தத்துவங்களை விளக்குவதில் அவரைப்போல் யாரும் இலர், பேரூரில் நடராச தத்துவத்தை மிகவும் தெளிவாக விளக்கினார்கள். அறிவுக்கு அறிவு இல்லை. ஆற்றலுக்கும் குறைவு இல்லை. தளர்ந்த வயதிலும் இப் பண்புகளை நன்றாகக் கொண்டிருந்தார்கள்.
 சில சமயங்களில் குறைவு என்று நமக்குத் தோன்றும்