பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் முன்னுரை

1968 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, தமிழ் நாடு அரசால் யானும் ஒரு பேராளனாக அழைக்கப் பெற்றுச் சென்று கலந்து கொண்டேன்; கட்டுரையும் வழங்கினேன்.

அப்போது ஒரு நாள், சென்னை - இலிங்கி செட்டித் தெருவில் உள்ள மறைமலையடிகள் நூலகத்திற்குச் சென்றேன். அது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேற்பார்வையில் நடைபெறுவது. நான் சென்றபோது, அக்கழகத்தின் தலைவர் வ. சுப்பையா பிள்ளையும் தேவ நேயப்பாவாணரும் அங்கு இருந்தனர். சிறிது நேரத்தில், செக்கோசுலோவகியாத் தமிழ் அறிஞர் கமல் சுவலெபில் என்பவர் தம் நண்பர் ஒருவருடன் அங்கு வந்து சேர்ந்தார்.

நாங்கள் அனைவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, வ. சுப்பையா பிள்ளை என்னை நோக்கி, 'உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொடுங்கள் - நான் வெளியிடுகிறேன்' - என்று கூறினார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. எனக்கு அப்போது நாற்பத்தாறாவது அகவைதான் நடந்து கொண்டிருந்தது. சில நூல்களும் எழுதியிருந்தேன். நான் சுப்பையா பிள்ளையைப் பார்த்து, “என்ன - என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? நான் அகவையில் சிறியவன் - போதிய பட்டறிவு இல்லாதவன்; இங்ஙனம் இருக்கவும் என் வாழ்க்கை வரலாற்றை எழுதித்தரின் வெளியிடுவதாகக் கூறுகின்றீர்களே - என்ன - கிண்டல் செய்கிறீர்களா?” - என்று நான் பதில் இறுத்தேன்.

அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: "நான் உங்களுக்காக மட்டும் - உங்கள் பெருமைக்காக மட்டும்