பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

45



ஒன்றா இரண்டா ?


ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - அய்யா

உழைத்தவை யாவையும் தொடுத்துச்சொல்ல - செய்கை
- ஒன்றா

வெயிலா மழையா நடந்து செல்வார் - நாம்

விழித்திடத் தமிழினம் பிழைத்திடச் செய்த - தொண்டு
- ஒன்றா

சென்றால் இருந்தால் நம் நினைவு - கண்

சிறிதே அயர்ந்தால் நம் கனவு - கனவு
- ஒன்றா

நினைவும் கனவும் எவர்க்காக - போர்

நெஞ்சினில் பொங்குதல் நமக்காகப் - போர்
- ஒன்றா

நின்குலம் தழைத்திடத் தமிழ்மகனே - நீ
நிலைத்திடத் துடித்தெழு! நின்கடனே
உயிரும் உடலும் நிலைத்தவையோ? - என்றும்
உழைப்பாய் நின்னினம் உயர்ந்திடவே

உயர்ந்திடவே உயர்ந்திடவே
25-6-79

எப்படிப் பெரியார் வாழ்வார் ?


பெரியார் எப்படி வாழ்வார் - நம்

பேச்சும் செயலும் பிளவுபட் டிருந்தால்
- பெரியார்

சரியா தவறா சடங்குகள் என்றே

அறியா திருந்தால் அறிவையும் மறந்தால்
- பெரியார்

சாதியும் மதமும் சரிப்பட வில்லை
சமுதா யந்தான் உருப்பட வில்லை
மோதிய பகையோ சாய்ந்திட வில்லை

மூடமும் இங்கே மாய்ந்திட வில்லை
- பெரியார்

சிந்தனை செய்கெனச் செப்பினர் அன்றோ?
சிறிதும் நும்செவி புகுந்ததும் உண்டோ?
மந்தைகள் போலினும் வாழ்வது நன்றோ?

மாந்தர்கள் எனநீர் மாறுவ தென்றோ?
- பெரியார்

6-12-1982