பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

47



வெல்லரிய படைவரிசை யுடைய வேந்தன்
       வீற்றிருக்கும் அரியணைதான் தமிழர் நெஞ்சம்;
நல்லறிஞன் இவனாட்சி பெருகக் கண்ட
       நாவிரண்டு கொண்டவர்கள் அழுக்கா றுற்றுப்
புல்லியசொற் கணைதொடுத்தும் அஞ்சா நெஞ்சன்
       புன்முறுவல் செய்துபகை வென்று நின்றான்;
சொல்லரசன் இவன்பெயரை வாழ்த்தி நிற்போம்
       தூயபுகழ் மாலைபல சூட்டி நிற்போம்.

நாட்டுக்குப் பெருமைதரும் வீரன் ஆனான்
       நாகரிக அரசியலின் தலைவ னானான்
பாட்டுக்குப் பொருளானான் பகைசேர் நெஞ்சும்
       பாராட்டும் பண்புடைய நல்லோன் ஆனான்
கேட்டுக்கு வித்தாகும் மடமை என்னும்
       கிளர்பகைக்குப் போராடும் எதிரி யானான்
ஏட்டுக்குள் ளடங்காத புகழின் மிக்கான்
       எம்மவர்க்கோர் உறவானான் அரணும் ஆனான்.

எழுத்தினிக்கும், பேச்சினிக்கும், எண்ண மெல்லாம்
       இனித்திருக்கும், முத்தமிழும் வல்லான் றன்பால்
பழுத்திருக்கும் நடிப்பினிக்கும், கழகம் காக்கும்
       பண்பினிக்கும், அரசியலின் திறமி னிக்கும்,
பழித்திருக்கும் கயவரையும் பொறுத்தி ருக்கும்
       பாங்குயர்ந்த சிறப்பினிக்கும், மேலோன் றன்னை
வழுத்துகிறேன் வாழ்த்துகிறேன் தமிழும் நாடும்
       வாழ்வதற்கே பல்லாண்டு கூறு கின்றேன்.