பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஞாயிறும் திங்களும்



அன்னைத் தமிழ்மொழியை அண்ணா மறந்தறியேன் ; என்னை யுருவாக்கும் என்னுயிரை, என்னுணர்வை , நான்வணங்குந் தெய்வத்தை, நாடி நரம்பெல்லாம் தான்புகுந்த செங்குருதி தன்னை மறப்பேனோ? தென்னாட்டு மண்ணில்தான் சேயாக நான்பிறந்தேன் அந்நாட்டு மண்ணள்ளி ஆசையுடன் தின்று தவழ்ந்தேன் நடந்தேன் தரையிற் புரண்டேன் தவந்தான் புரிந்தேன் தமிழ்நாட்டில் நான்பிறக்க ; என்னுயிரின் மூச்செல்லாம் தென்பொதியக் காற்றாகும் பொன்னிமகள் ஊட்டியபால் என்னுடலின் செங்குருதி : அன்னைத் திருநாட்டை அண்ணா மறந்தறியேன் என்னைத் தவறாக எண்ணி இகழற்க! என்னினத்தை அவ்வினத்தின் ஏற்றத்தை எண்ணாத கன்மனத்தன் நானல்லேன் நாளுங் கருதுகின்றேன் ; தார்கொண்ட தானைத் தலைவாநம் தாயகத்தைப் பார்மன்னா பாரிங்கே! பாவி சிலர்கூடிச் செந்தமிழைத் தாழ்த்துகிறார் சீர்கெட் டலைகின்றார் எந்தவிதம் அண்ணா இதனைப் பொறுத்திருப்பேன் ? போருக்கு நானெழுந்தேன் போர்க்களத்தில் என்னெதிரில் நேருக்கு நேராக நிற்பவனோ என்னினத்தான் ; என்செய்வேன் அண்ணா இனத்தான் பகையானால் ? தன்மொழிக்குத் தானே தடையாக நிற்கின்றான் ; நாடாண்ட நம்மினமும் நற்றமிழும் தாயகமும் பீடாண்டு கொள்ளப் பெரும்பாடு பட்டிங்கு வாழுங் கழகத்தை வாட்டி ஒழிப்பதற்குத் தாளம் இடுபவரைத் தந்நலமே கொண்டவரை நம்பி ஒருமனிதன் நாடகங்கள் ஆடுகிறான்; வெம்பித் தளர்ந்துமிகும் வேதனையால் நொந்தேன் உடனிருந்தே கொல்லும் உறுபிணிபோ லாகிக் கடலிலங்கை வீடணனாய்க் கைவரிசை காட்டி, அரியணையின் மீதேறும் ஆசை மனத்துள் மருவும் குடிலனென மாறிமனம் போய்விட்டான் ; என்றுநான் சொன்னேன் இடைமறித்துத் 'தம்பிநீ இன்றுரைத்த உன்மொழியை என்செவிகள் ஏலா எதுவரினும் தாங்கும் இதயத்தைப் பெற்றால் கதுவவரும் துன்பம் கடிதின் விலகு" மென்றான் ;