பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 / வயலூர் சண்முகம்


முத்துவின் ஊர் பெயர் மூக்கன்பட்டி!
பத்துடன் ஐம்பது பழைய வீடுகள்!
சத்திரம்; கோவில் சந்தைத் திடலுடன்
மத்தியில் குளமும் மாந்தோப்பும் உண்டு!

புத்தக மூட்டையைக் குதிர்மேல் போட்டான்!
அத்தை மிரட்டியும் படிப்பை விட்டான்!
கத்தியும் கம்பும் கைகளில் பிடித்துச்
சத்திரம் தோப்பைச் சுற்ற லானான்!

அஞ்சாறு காலிப் பசங்கள் முத்துவின்
பிஞ்சு மனசைக் கெடுத்து விட்டனர்!
மஞ்சா பட்டம்* 'கேட்டா பெல்ட்'டுடன்
பஞ்சு என்றொரு பாவியும் சேர்ந்தான்.

பஞ்சு முத்துவைப் பம்பரம் ஆக்கினான்.
'அஞ்சு' 'பத்தை'அத்தை வீட்டுக்
கஞ்சிக் கலயத்தில் 'கிளப்ப'ச் சொன்னான்!
கெஞ்சிக் குலவிக் 'கறக்க'ச் சொன்னான்!


* கேட்டா பெல்ட் : கவட்டிவாரு என்றும் அழைக்கப்படும். உண்டிக்கோல் என்னும் இந்த கிராமிய வேட்டைக் கருவியால் பறவைகளை வீழ்த்தலாம். பழங்கள், காய்களை வீழ்த்தலாம்.