பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘டானா' முத்து / 37


“கராத்தே" என்னும் ஜப்பான் நாட்டு
அருமை யான வீரக் கலையை
பெரிய அத்தான் திருவடி யிடத்தே
முறைப்படிக் கற்று நிபுணன் ஆனான்!


திறமையாய்க் 'கராத்தே' தினமும் பழகினான்!
உறுதியாய் உடலையும் பாது காத்தான்!
முறுக்கியும் சுழற்றியும் எதிராளி உடலை
வெறும்கை களாலே வீழ்த்தவும் கற்றான்!


படிப்பகம் சென்று பத்திரிகை படித்தான்!
நடிப்பகம் சென்று நாடகம் கண்டான்!
அடுப்படியில் சோறு ஆக்கவும் கற்றான்!
படிப்படி யாக முத்து வளர்ந்தான்!


வஞ்சகர், கயவர் தேசத் துரோகிகள்
கஞ்சா அபினி கடத்து வோரோடு
பஞ்சுவும் சேர்ந்து காவலில் சிக்கியதை
கொஞ்ச நாளிலேயே இதழ்களில் அறிந்தான்!


ஆறேழு மாதங்கள் ஆசிரியர் வீட்டில்
நூறு நூறு நூதன விஷயங்கள்
கூறவும் எழுதவும் கற்றுத் தெளிந்தான்
ஆறுதல் மாறுதல் அடைந்து வந்தான்!