பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

93

பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான் என்று வண்டியின் ஒரு மூலையில் முடங்கினான் அவன். காற்றின் மாறுபாடில்லாத கதறலைக் கிழித்து திடீரென்று வேறொரு புதிய ஒலி—ஜீவனுள்ள குரல்—எழுந்ததை அவன் தெளிவாக அறிந்தான். அது படிப்படியாக உயர்ந்து ஓங்கி மிகத் தெளிவாக ஒலித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கரைந்தது. அது ஒரு ஓநாய் தான் என்பதில் சந்தேகமே கிடையாது. அது மிகவும் அருகிலேயே நின்றதாகத் தோன்றியது. அது தனது ஓலத்தின் தன்மையை மாற்றிய பொழுது ஏற்பட்ட அதனுடைய வாய் அசைவைக் கூட காற்று எடுத்துக் காட்டியது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கோட்டுக் காலரை மடித்துக் கொண்டு கூர்ந்து கவனித்தான். முக்கார்ட்டி கூட, காதுகளை அசைத்துக் கொண்டு நன்றாய்க் கேட்பதற்குச் சிரமப்பட்டது. ஓநாய் தனது ஊளையை நிறுத்தி விட்டதும், குதிரை காலை மாற்றி மாற்றி வைத்து அசைந்து. எச்சரிக்கையாக ஒரு கனைப்பு எழுப்பியது.

இதற்குப் பிறகு அவனால் தூங்கவும் இயலவில்லை; தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை. தனது கணக்குகள், தொழில், மதிப்பு, செல்வம் இவைகளைப் பற்றி அவன் அதிகமாகச் சிந்திக்கச் சிந்திக்க, முன்னிலும் மிக அதிகமான பயம்தான் அவனை ஆட்கொண்டது. ராத்திரிப் பொழுதைக் கழிக்க கிரிஷ்கினோவில் தங்காமல் போனோமே என்ற வருத்தம் அவனது எண்ணங்களில் கலந்து குழம்பியது; சிந்தனையில் மேலோங்கி நின்றது.