பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டால்ஸ்டாய் கதைகள்


‘சைத்தான் காட்டை விழுங்கட்டும்! அது இல்லாத பொழுது எல்லாம் ஒழுங்காக இருந்ததே. அட கடவுளே! ஆ, இந்த இரவு நேரத்துக்கு மட்டும் நமக்குப் பாதுகாப்பு கிடைக்குமானால்!’ என்று தானாகவே பேசிக் கொண்டான் அவன். ‘குடிகார்கள்தான் குளிரில் விறைத்துச் சாவார்கள் என்று சொல்வது வழக்கம். நானும்தான் ஏதோ குடித்தேன்’ என்று அவன் எண்ணினான்.

அவன் தனது உணர்ச்சிகளை ஆராய்ந்த போது உடம்பிலே உதறல் ஏற்பட்டிருந்ததை அறிய முடிந்தது. ஆனால் அது குளிரினாலா அல்லது பயத்தினாலா என்பதுதான் தெரியவில்லை. நன்றாகப் போர்த்திக்கொண்டு, முன்போலவே படுத்துக்கிடக்க முயன்றான் அவன். ஆனால் மேற்கொண்டு அவ்விதம் செய்ய முடியவில்லை அவனால். ஒரே நிலையில் இருப்பது சாத்தியப்படவில்லை அவனுக்கு. அவன் எழுந்திருக்கவும், தன்னுள்ளே தலையெடுத்துப் பெரிதாக வளரும் பயத்தை ஒடுக்கிவிட ஏதாவது செய்யவும் விரும்பினான். அந்த பயத்தின் எதிரிலே தான் சக்தியற்றவன் என்ற உணர்வும் அவனுக்கு இருந்தது. அவன் மீண்டும் தனது சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் எடுத்தான். மூன்றே மூன்று குச்சிகள்தான் இருந்தன. அவை கூட கெட்டுப் போனவைதான். எனவே நெருப்பு பற்றிக் கொள்ளாமலே அவற்றின் மருந்து சிதறிப் போயிற்று.

‘சைத்தான் உன்னை விழுங்கட்டும்! நாசமாய்ப் போனவை! பாழாய்ப் போக!’ என்று, யாரை அல்லது எதை சபிக்கிறோம் எனும் பிரக்ஞையே இல்லாமல், அவன் முணமுணத்தான். நசுங்கிய சிகரெட்டை