பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

97


7

நிகிட்டா தன்னை சாக்குத் துணியினால் போர்த்திக் கொண்டு வண்டிக்குப் பின்புறத்தில் உட்கார்ந்த நேரத்திலிருந்து அசையவே இல்லை. இயற்கையோடு தொடர்பு கொண்டும், பற்றாக்குறை என்பதை எப்பொழுதும் அனுபவித்தும் வாழ்கிற எல்லோரையும் போலவே அவனும் பொறுமையோடு இருந்தான். அப்படி பல மணி நேரம்—ஏன், பல தினங்கள் கூட—அமைதியை இழக்காமலும் எரிச்சல் பெறாமலும் அவன் இருக்க முடியும்.

தனது எஜமான் கூப்பிட்டதை அவன் கேட்கத்தான் செய்தான். ஆயினும் அவன் பதில் பேசவில்லை. ஏனென்றால் அவன் அசையவோ பேசவோ விரும்பவில்லை. அவன் பருகிய தேநீரினாலும், பனி ஓட்டத்தில் கஷ்டப்பட்டு நகர்ந்து வலிமையுடன் போராடியதனாலும் அடைந்த உஷ்ணம் அவனது தேகத்தில் இன்னும் கொஞ்சம் இருந்தது. என்றாலும், அந்தச் சூடு வெகுநேரம் நீடித்திராது என்பதையும், மீண்டும் அங்குமிங்கும் அலைந்து கதகதப்பு பெறுவதற்குத் தேவையான பலம் தனது உடம்பில் இல்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். சட்டென்று நின்றுகொண்டு, சாட்டையால் அடித்தபோதிலும் முன்னே நகர மறுக்கிற குதிரையைப் போல்தான் அவனும் மிகுந்த களைப்பெய்தி விட்டான். சோர்ந்து போன குதிரையை மறுபடியும் உழைக்கும்படி செய்ய வேண்டுமானால் அதற்கு நல்ல தீனி கொடுக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்கிற சொந்தக்காரன் போலவே அவனும் தனது தேக நிலை பற்றி உணர்ந்திருந்தான்.

64—8