பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

டால்ஸ்டாய் கதைகள்


ஓட்டை விழுந்திருந்த பூட்ஸிலிருந்த பாதம் இதற்குள் மரத்துப் போய்விட்டது. அவனுடைய காலில் பெருவிரல் இருந்ததாகவே உணரமுடியவில்லை அவனால். அதுபோக, அவன் உடல் பூராவுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குளிரடைந்து வந்தது. அந்த இரவிலேயே அவன் செத்து விடலாம்—அனேகமாகச் செத்தே போவான்—என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. ஆயினும் அந்த நினைப்பு குறிப்பிடத் தகுந்த அளவு கசப்பானதாகவோ பயங்கரமானதாகவோ தோன்றவில்லை.

அது அவனுக்குக் குறிப்பிடத் தகுந்த அளவு கசப்பானதாகத் தோன்றாதது ஏனென்றால், அவனுடைய வாழ்நாள் பூராவும் தொடர்ச்சியானதொரு பண்டிகையாகவே அமைந்திருந்ததில்லை. ஆனால், அதற்கு மாறாக, முடிவற்ற கடின உழைப்பின் சுழற்சியாகவே இருந்தது அது. அதனால் அவனுக்கு அலுப்புத் தோன்றத் தொடங்கியிருந்தது.

அவனுக்கு அது குறிப்பிடத் தகுந்த அளவு பயங்கரமானதாகத் தோன்றாதது ஏனெனில், வாஸிலி ஆன்ட்ரீவீச்சைப் போன்ற எஜமானர்களுக்கு உழைத்து அவர்களை நம்பி அவன் வாழ நேரிட்ட போதிலும், தான் எப்பொழுதும் எல்லோருக்கும் தலைவரான ஆண்டவனை நம்பியிருக்க வேண்டியவனே என உணர்ந்திருந்தான். அவனை இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்தவர் அவரே. அவன் இறக்கும் தறுவாயில் கூட அவருடைய ஆட்சிக்கு உட்பட்டவன் தான்; அவர் அவனை மோசமாக நடத்த மாட்டார் என்றும் அவன் அறிந்திருந்தான்.