பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டால்ஸ்டாய் கதைகள்

பிரிவினை விவகாரம் பற்றியும் எண்ணினான். பின்னர், தனது சொந்த மகனைப் பற்றியும், கம்பளித்துணி போர்த்தப்பட்டு நிற்கிற முக்கார்ட்டி பற்றியும் நினைத்தான். அப்புறம், வண்டியில் அங்கு மிங்கும் ஆடி அசைந்ததன் மூலம் அதைக் கிரீச்சிடச் செய்த எஜமானைப் பற்றியும் நினைத்தான். ‘இப்படிக் கிளம்பி வந்ததற்காக இப்பொழுது நீரே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர் என்று நினைக்கிறேன், அருமை ஐயாவே!’ என்று எண்ணினான் அவன். ‘அவருடையதைப் போன்ற வாழ்வை விட்டு விட்டுப் போவதென்றால் கஷ்டமாகத் தான் இருக்கும்! அது நம் போன்றவர்களின் வாழ்வு போன்றது இல்லையே’ என்றும் அவன் நினைத்தான்.

பிறகு இந்த நினைவுகள் எல்லாம் அவன் மண்டையினுள் குழம்பிக் கலந்து விடத் தொடங்கின. அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

ஆனால், வாஸிலி ஆன்ட்ரீவிச் குதிரை மீது ஏறிக் கொண்டு வண்டியை ஆட்டிவிட்டபோது, அது கொஞ்சம் அசைந்து விலகியது. அப்பொழுது வண்டியின் முதுகிலே சாய்ந்திருந்த நிகிட்டாவின் மீது சிறு அடி ஒன்று விழுந்தது. அதனால் அவன் விழித்தெழுந்தான். அவனுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ அவன் உட்கார்ந்திருந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமாகிவிட்டது. அவன் தனது கால்களை சிரமத்தோடு நீட்டி, அவற்றின் மீது விழுந்து கிடந்த பனியை உதறிக்கொண்டே எழுந்தான். உடனடியாகவே, துயர்தரும் குளிர் அவன் தேகம் பூராவும் குத்திப் பாய்ந்தது.