பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

103


முக்கார்ட்டி கஷ்டப்பட்டுக் கொண்டே அவனுக்கு அடங்கி, அவன் செலுத்திய திக்கு நோக்கித் தளர் நடை நடந்தது.

சுமார் ஐந்து நிமிஷ நேரம் வாஸிலி ஆன்ட்ரீவிச் நேராகப் பிரயாணம் செய்தான். அப்படித்தான் அவன் நினைத்தான். குதிரைத் தலையையும் விரிந்து கிடந்த வெண்மய வெம்பரப்பையும் தவிர வேறொன்றையும் அவன் காணவில்லை. குதிரையின் காதுகளைச் சுற்றியும், தனது கோட்டுக் காலர் அருகிலும் விசிலடித்துச் சுழன்ற காற்றின் ஒலி தவிர வேறு எதையும் அவன் கேட்கவில்லை.

திடீரென்று அவனுக்கு முன்னால் கறுப்பாக ஏதோ ஒன்று பார்வையில் பட்டது. அவன் இதயம் ஆனந்தத்தினால் துடித்தது. கிராமத்து வீடுகளின் சுவர்களைக் கற்பனையில் கண்டு களித்தவாறே அவன் அந்தப் பொருளை நோக்கி முன்னேறினான். ஆனால் அந்தக் கறுப்புக் குவியல் நின்ற இடத்திலேயே நிற்காமல் அசைந்து கொண்டிருந்தது. அது ஒரு ஊர் அல்ல. ஒருவகை மரத்தின் நெடிய கிளைகள் தான் அவை. இரண்டு வயல்களுக்கு ஊடாக உள்ள வரப்பிலே நின்ற மரங்கள் சிலவற்றின் கிளைகள் மாத்திரமே பனிப்பரப்பைத் துளைத்து மேலெழுந்து காட்சி தந்தன. அவற்றை ஒரே திக்கில் சரியும்படி அடித்துக் கீச்சிட்டுச் சுழன்ற காற்றினால் அவை மூர்க்கமாக அலைக்கழிக்கப்பட்டன.

இரக்கமற்ற காற்றினால் பாடாய்ப்படுத்தப்பட்ட மரங்களின் தோற்றம் வாஸிலியை நடுங்கச் செய்தது. ஏனென்று அவனுக்கே புரியவில்லை. அவன் குதிரையை அவசரம் அவசரமாக ஓட்டினான். மரங்களை