பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

டால்ஸ்டாய் கதைகள்

களை நிகிட்டாவுக்கும் வண்டியின் பக்கங்களுக்குமிடையே திணித்து வைத்து, அதன் ஓரத்தை முழங்கால்களினால் அழுத்திக் கொண்டான் வாஸிலி, தன் முகம் கீழ் நோக்கியிருக்க, தலையை வண்டியின் முன்புறத்தோடு பதித்துக் கொண்டு அவன் படுத்து விட்டான். இங்கே அவன் குதிரையின் அசைவுகளையோ, காற்றின் கீச்சொலியையோ கேட்டானில்லை. நிகிட்டா மூச்சு விடுவதை மாத்திரமே கேட்க முடிந்தது அவனால்.

ஆரம்பத்தில், வெகு நேரம் வரை, நிகிட்டா அசைவற்றுக் கிடந்தான். பிறகு ஆழ்ந்த நெடுமூச்சுயிர்த்து அசைந்து கொடுத்தான்.

‘அதோ! நீ செத்துப் போவதாகச் சொல்கிறாயே! அசையாமல் படுத்து, சூடு பெற்றுக் கொள். இது தான் நமது வழி....’ என்று பேசத் தொடங்கினான் வாஸிலி.

ஆனால் அவனுக்கே ஆச்சரியமாகிவிட்டது. அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. ஏனெனில் அவன் கண்களில் நீர் பெருகியது. அவனுடைய கீழ்த்தாடை வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தொண்டைக் குழியில் எழுந்தவற்றை உள்ளே விழுங்கினான், ‘நான் படுமோசமாகப் பயந்து விட்டேன். அதனால் மிகுந்த பலவீனனாகிப் போனேன் என்று தோன்றுகிறது’ என் அவன் நினைத்தான். ஆயினும் இந்த பலவீனம் அதிருப்திகரமானதாக இல்லை என்பது மட்டுமல்ல; அவன் அதற்கு முன் எப்போதுமே அனுபவித்திராத விசேஷமானதொரு ஆனந்தத்தையும் அவனுக்குத் தந்தது.