பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

டால்ஸ்டாய் கதைகள்

சித்தான்; முடியவில்லை. காலை அசைக்க முயன்றான்; அதுவும் முடியவில்லை. தன் தலையைத் திருப்ப முயன்றான்; முடியவில்லை. அதனால் அவன் ஆச்சர்யம் அடைந்தான். ஆயினும் மனம் கலங்கிவிடவில்லை. இதுதான் மரணம் என்று அவன் புரிந்துகொண்டான். அந்த உணர்ச்சியினால் கூட அவன் குழம்பிவிடவில்லை. தனக்குக் கீழே நிகிட்டா கிடக்கிறான்; அவன் சூடுபெற்று விட்டான்; உயிரோடும் இருக்கிறான் என்கிற விஷயம் வாஸிலியின் நினைவில் எழுந்தது. தானே நிகிட்டா; நிகிட்டாவேதான்; தன்னுயிர் தன்னிடம் இல்லை; அது நிகிட்டாவிடமே இருந்தது எனத் தோன்றியது அவனுக்கு. அவன் சிரமத்தோடு செவிசாய்த்துக் கவனித்ததில், நிகிட்டா மூச்சு விடுவது கேட்டது. அவன் லேசாகக் குறட்டை விடுவதாகவும் தெரிந்தது. ‘நிகிட்டா உயிரோடு இருக்கிறான். ஆகையால் நானும் உயிரோடு வாழ்கிறேன்’ என்று வெற்றி மிடுக்கோடு அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

தனது பணம், தனது கடை, தனது வீடு, வாங்குவது விற்பது, மிரொனோவின் லட்சங்கள் ஆகியவற்றைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். தனக்குத் தொல்லை தந்த இவ்விஷயங்கள் பற்றி எல்லாம் வாஸிலி பிரக்குனோவ் என்கிற மனிதன் ஏன் தான் அல்லற்பட்டுக் கொண்டானோ என்பதை அவன் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.

‘ஆமாம். அது ஏன் அப்படியென்றால், உண்மையான விஷயம் எது என்பதை அவன் அறியவில்லை’ என்று நினைத்தான். வாஸிலி பிரக்குனோவ் என்பவனைக் குறித்தேதான். 'அதை அவன் அறியவில்லை. ஆனால் இப்பொழுது நான் அறிகிறேன். நிச்சயமாக