பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

டால்ஸ்டாய் கதைகள்

விரோதமான விந்தையாக இருக்கிறது....என்றாலும், ஒரு மனிதன் இரண்டு தரம் சாகமுடியாது; ஒரே ஒரு தடவைதான் சாகவேண்டும்; அதுமட்டும் சீக்கிரம் வந்து சேர்ந்தால்!’ என்று நிகிட்டா பேசிக் கொண்டான்.

அவன் மீண்டும் தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டான். கண்களை மூடினான். இப்பொழுது சந்தேகத்துக்கு இடமில்லாமலும், இறுதியாகவும் சாகிறோம் என்ற நம்பிக்கை ஏற்படவே, அவன் தன் நினைவு இழந்து விட்டான்.

அன்று மத்தியான வேளைக்குப் பிறகுதான் குடியானவர்கள் வாஸிலி ஆன்ட்ரீவிச்சையும் நிகிட்டாவையும் பனிக்குள்ளிருந்து தோண்டி வெளியே எடுத்தார்கள். அவ்விருவரும் புதையுண்டு கிடந்த இடம் ரோட்டிலிருந்து எழுபது கஜ தூரத்திற்குள் தான் இருந்தது; கிராமத்துக்கும் அதற்கும் அரைமைல் தூரம்கூட இல்லை.

வண்டியைப் பனி நன்றாக மூடியிருந்தது. எனினும், அதன் சட்டங்களும் அவற்றில் கட்டப்பட்டிருந்த கைக்குட்டையும் பார்வையில் பட்டுக் கொண்டுதானிருந்தன. முக்கார்ட்டி வயிறு வரை பனியில் புதையுண்டு நின்றது. பட்டை வாரும், கம்பளித் துணியும் கீழே விழுவதுபோல் தொங்கின. குதிரையின் உடல் பூராவும் ‘வெள்ளைவெளேர்’ என்றிருந்தது. உறைந்துபோன குரல்வளையுடன் அழுத்தப்பட்டிருந்தது அதன் தலை. நுண்பனிக் கம்பிகள் அதன் நாசித்துவாரங்களிலிருந்து தொங்கின. வெண்பனிப் படலம் பரவியிருந்த அதன் கண்களில் துயர நீர் தேங்கி நின்றதாகத் தோன்றியது. அந்த