பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

125

ஒரே இரவில் வெறும் எலும்பும் தோலுமாக மாறிவிடும். அளவுக்கு அது மெலிந்து போயிருந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் உறைந்து போன பிணம் மாதிரி விறைப்பேறிக் கிடந்தான். நிகிட்டாவின் மேலிருந்து அவனை உருட்டித்தள்ளிய போதும், அவனுடைய கால்கள் அகண்டும் கைகள் நீண்டும் ஒரே நிலையிலேயே இருந்தன. அவனது பெரிய கழுகுக்கண்கள் உறைந்து விட்டன. கத்திரித்து விடப் பெற்ற மீசையின் கீழே திறந்திருந்த வாய் பூராவும் பனி நிறைந்து காணப்பட்டது. ஆனால் நிகிட்டா நன்கு குளிர்ந்து போன போதிலும் இன்னும் உயிருடனிருந்தான்.

அவனுக்குப் பிரக்ஞை ஏற்பட்ட உடனே, தான் அதற்கு முந்தியே இறந்து விட்டதாகவும், தனக்கு நிகழ்வன அனைத்தும் இந்த உலகத்து அனுபவங்கள் அல்ல; மறு உலக நிகழ்ச்சிகளே என்றும் அவன் நிச்சயமாக நம்பினான். அவனை வெளியே தோண்டி எடுத்து, வாஸிலியின் உறைந்த சடலத்தை உருட்டித் தள்ளிய போது குடியானவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். முதலில் அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மறு உலகத்தில் கூட குடியானவர்கள் பழைய ரீதியிலேயே கத்துகிறார்களே என்றும், அவர்கள் அதே உடலோடு இருக்கிறார்களே என்றும் அவன் அதிசயித்தான். அப்புறம் அவன் இன்னும் இந்த உலகத்திலேயேதான் இருக்கிறான் என்று புரிந்து கொண்டதும் அதற்காகச் சந்தோஷப்படவில்லை. வருத்தமே அடைந்தான் அவன். அதிலும், தனது இரண்டு கால்களிலுமுள்ள விரல்கள் உறைந்து போய்விட்டன என்பதை உணர்ந்த பிறகு அவன் வருத்தம் அதிகரித்தது.