பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

டால்ஸ்டாய் கதைகள்


நிகிட்டா இரண்டு மாத காலம் ஆஸ்பத்திரியில் கிடந்தான். அவனுடைய கால் விரல்களில் மூன்று வெட்டி எறியப்பட்டன; மற்றவை குணமாகி விட்டன. அதனால் அவன் மறுபடியும் வேலை செய்வது சாத்தியமாயிற்று. மேலும் இருபது வருடங்கள் அவன் உயிர் வாழ்ந்தான். முதலில், பண்ணைத் தொழிலாளியாகப் பாடுபட்டான். பிறகு, வயோதிக காலத்தில் காவல்காரன் வேலைபார்த்தான். முடிவில் அவன் ஆசைப்பட்டது போலவே, வீட்டில் விக்கிரகங்களின் அடியில், ஒளி ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி ஒன்றைத் தனது கைகளில் பற்றியவாறே உயிர் துறந்தான்.

அவன் சாவதற்கு முன்பு தனது மனைவியிடம் மன்னிப்பு கோரினான். சில்லறை வேலைகள் செய்கிறவனோடு அவள் கொண்டிருந்த தொடர்புக்காக அவளை அவன் மன்னித்து விட்டான். தனது மகனிடமும் பேரக் குழந்தைகளிடமும் விடை பெற்றுக் கொண்டான். தனக்கு உணவளித்து போஷிக்கும் பொறுப்பிலிருந்து தனது மகனையும் மருமகளையும் விடுவிக்கிறோம்; தனக்கு அலுப்புத் தந்த இந்த வாழ்க்கையை விட்டு விட்டு வேறொரு வாழ்விலே—ஆண்டுதோறும், மணி தோறும் தெளிவினும் தெளிவாகி, அவாவினை அதிகமாக்கி நின்ற ஒன்றிலே—பிரவேசிக்கிறோம் எனும் உண்மையான ஆனந்தத்தோடு அவன் மரணம் அடைந்தான். அங்கே, மரணத்திற்குப் பிறகு விழித்தெழுந்த இடத்தில், அவன் முன்னிலும் நன்னிலையில் வாழ்கின்றானா, மோசமாய் மாறினானா; ஏமாற்றம் கண்டானா, அல்லது தான் எதிர்பார்த்து ஏங்கியதைப் பெற்றுவிட்டானா என்பதை நாமும் ஒருநாள் அறிவோம்.