பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

டால்ஸ்டாய் கதைகள்

இதைக் கேள்வியுற்ற அரசன் அதிக வியப்படைந்தான். அத்தகைய தானியம் எப்பொழுது எங்கே விளைந்தது என்று கண்டுபிடிக்கும்படி அரசன் மதியூக மந்திரிகளுக்குக் கட்டளையிட்டான். அவ் அறிவு மணிகள் மீண்டும் ஆலோசித்தார்கள்; அகப்பட்ட நூல்களில் எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள். எனினும் அதைப்பற்றி எதுவுமே புலனாகவில்லை.

ஆகவே அவர்கள் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள் 'நாங்கள் எவ்விதமான பதிலும் தருவதற்கில்லை. அதைப் பற்றி எங்கள் புத்தகங்களில் ஒன்றுமே இல்லை. தாங்கள் குடியானவர்களைத் தான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை அவர்களில் சிலர் அவர்களது தந்தையரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கலாம், தானியம் இந்த அளவுக்கு எந்தக் காலத்தில் எங்கே விளைந்தது என்று.'

ஆகையினால், மிகவும் வயதாகிப் போன குடியானவன் எவனையாவது தன் முன்னே கொண்டுவந்து நிறுத்தும்படி அரசன் ஆக்கினை செய்தான். அவனது பணியாளர்கள் அப்படிப்பட்ட மனிதன் ஒருவனை மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

முதிர்ந்து, கூன் விழுந்து, சாம்பல் போல் நிறம் வெளுத்து, பல் இழந்து காணப்பட்ட அந்த மனிதன் இரண்டு கோல்களின் ஆதரவோடு தள்ளாடி வந்துதான் ராஜாவின் திருமுன்னிலே நிற்க முடிந்தது.

அரசன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காட்டினான். ஆனால் அக் கிழவன் அதைச் சரியாகப் பார்க்கக்கூட இயலவில்லை. எனினும் அவன் தன் கைகளில் அதை வாங்கி, தொட்டுத் தடவிப் பார்த்தான்.