பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அது ஒரு காலம்

129


இத்தகைய தானியம் எங்கே விளைந்தது என்று உன்னால் சொல்ல முடியுமா, கிழவா? இதுமாதிரி தானியத்தை நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது உன் வயல்களில் விதைத்தது உண்டா? என்று மன்னன் கேட்டான்.

அந்த வயோதிகனின் காதுகள் மந்தமாகியிருந்தன. அதனால் ராஜாவின் பேச்சை அவன் சிரமப்பட்டுத்தான் கிரகிக்க முடிந்தது. மிகுந்த சிரமத்தோடுதான் அவன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முடிவில் அவன் அறிவித்தான்; ‘இல்லை, இது போன்ற தானியத்தை நான் என் வயல்களில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. நாங்கள் தானியம் வாங்கிய காலத்தில், தானிய மணிகள் இப்பொழுது உள்ளதுபோல் சிறியனவாகவே இருந்தன. ஆனாலும் நீங்கள் என் தந்தையை விசாரித்துப் பாருங்கள். இந்த ரகமான தானியம் எங்கே விளைந்தது என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்.’

எனவே அக் கிழவனின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டு ராஜா முன் கொண்டு வரப்பட்டான். அவன் ஒரு கோல் ஊன்றி நடந்து வந்தான்.

மன்னன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காண்பித்தான். அவ்வயோதிகக் குடியானவனுக்கு இன்னும் பார்வை நன்றாகவே இருந்தது. அவன் தானியத்தைக் கூர்ந்து நோக்கினான்.

‘இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று உம்மால் சொல்ல முடியுமா, பெரியவரே? இதுபோல் நீர் வாங்கியது உண்டா? இல்லையேல் உமது வயல்களில் பயிரிட்டதாவது உண்டா?’ என்று அரசன் கேட்டான்.

64—10