பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

135

குப்படி கொடுக்கவேண்டிய பணத்தைச் செலுத்திவிட்டு, அவன் தனது யாத்திரையைத் தொடர்ந்தான்.

சுமார் இருபத்து ஐந்து மைல்களைக் கடந்த பிறகு, குதிரைகளுக்குத் தீனி கொடுப்பதற்காக அவன் வண்டியை நிறுத்தினான். அங்கிருந்த விடுதிக்குப் போகும் பாதையில் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு அக்ஸனோவ் உள்ளே சென்றான். ‘ஸ்மோவா’ருக்குச் சூடேற்றும்படி சொல்லிவிட்டு, அவன் தனது இசைக்கருவியை எடுத்துப் பாட ஆரம்பித்தான்.

திடீரென்று, மணிகள் ‘ஜனஜன’ என்று ஒலிக்க, மூன்று குதிரைகள் பூட்டிய வண்டி ஒன்று அங்கே வந்து நின்றது. அதிலிருந்து பெரிய அதிகாரி ஒருவர் இறங்கினார். அவருக்குப் பின்னால் இரண்டு வீரர்கள் வந்தார்கள்.

அவர் அக்ஸனோவை அணுகி விசாரணை செய்யத் தொடங்கினார். அவன் யார், எங்கிருந்து வந்தான் என்றெல்லாம் கேட்டார். அவனும் விவரமாகப் பதில் அளித்தான். பிறகு, “என்னோடு சேர்ந்து டீ சாப்பிடுங்களேன்” என்று உபசரித்தான்.

ஆனால் அந்த அதிகாரி விசாரணையைத் தொடர்ந்து நடத்தலானார், “நேற்று ராத்திரி நீ எங்கே தங்கியிருந்தாய்? நீ தனியாக இருந்தாயா; இன்னொரு வியாபாரியுடன் தங்கினாயா? அந்த வியாபாரியை இன்று காலையில் நீ பார்த்தாயா? விடிவதற்கு முன்பே நீ ஏன் விடுதியை விட்டுப் புறப்பட்டு வந்தாய்?” என்று விசாரித்தார்.

இவ்வாறெல்லாம் தான் ஏன் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வியப்பு அவனுக்கு ஏற்பட்டது.