பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

டால்ஸ்டாய் கதைகள்

என்றாலும் அவன் நல்ல மனிதன்தான் என்றே அந்நகரத்தின் வியாபாரிகளும் மற்றவர்களும் அறிவித்தார்கள். பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தது. ரியஜான் நகரிலிருந்து வந்த வியாபாரியைக் கொலை செய்து, அவனிடமிருந்த இருபதினாயிரம் ரூபிள்களை அக்ஸனோவ் அபகரித்துக் கொண்டான் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அவன் மனைவி குழப்பத்தில் ஆழ்ந்தாள். எதை நம்புவது என்றே அவளுக்குப் புரியவில்லை. அவளது குழந்தைகள் அனைவரும் சின்னஞ் சிறுசுகள். பால்குடி மறக்காத சிறுபிள்ளை ஒன்றும் இருந்தது. எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவள் கணவன் ஜெயிலில் கிடந்த நகரை நோக்கிச் சென்றாள். முதலில் அவனைச் சந்திப்பதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, எவ்வளவோ அழுது கெஞ்சியதன் பயனாக அதிகாரிகளிடமிருந்து அவள் அனுமதி பெற முடிந்தது. அவள் கணவனிடம் அவளைக் கூட்டிச் சென்றார்கள்.

ஜெயில் உடுப்பு அணிந்து, விலங்குகள் மாட்டப்பெற்று, திருடர்களோடும் கொடிய குற்றவாளிகளுடனும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கணவனைப் பார்த்த உடனேயே அவள் தலைசுற்றி கீழே விழுந்து விட்டாள். வெகு நேரம் வரையில் அவள் விழிப்பு அடையவே இல்லை.

பிறகு தனது குழந்தைகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் அவனுக்கு அருகே அமர்ந்தாள். வீட்டு விஷயங்களைப்பற்றி அவனிடம் பேசினாள். அவனுக்கு என்ன நேர்ந்தது என விசாரித்தாள். அவன் நடந்தது முழுவதையும் அவளிடம் சொன்னான்.