பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

டால்ஸ்டாய் கதைகள்

மனைவிகூடத் தன்மீது சந்தேகப்படுகிறாள் என்ற நினைப்பு எழவும், “கடவுள் ஒருவருக்குத்தான் உண்மை தெரியும் போலிருக்கிறது. அவருக்குத்தான் நாம் மனுச் செய்து கொள்ளவேண்டும். அவரிடமிருந்துதான் நாம் கருணையை எதிர்பார்க்கவேண்டும்” என்று அக்ஸனோவ் தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

ஆகவே அக்ஸனோவ் அதற்குப் பிறகு எந்த விதமான மனுவும் எழுதவில்லை. தனக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அவன் துறந்து விட்டான். ஆண்டவனை நினைத்துப் பிரார்த்தனை மட்டும் புரிந்து வந்தான்.

அவனுக்குக் கசைஅடி கொடுக்கவேண்டும்; அப்புறம் சுரங்க வேலைக்கு அவனை அனுப்பிவிட வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறே அக்ஸனோவ் கசையினால் அடிக்கப்பட்டான். அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறிய பிறகு, இதர குற்றவாளிகளுடன் அவனும் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டான்.

இருபத்தாறு வருட காலம் அக்ஸனோவ் சைபீரியாவில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்து வாழ்ந்தான். அவனுடைய தலைமயிர் பனி மாதிரி வெளுத்துப் போயிற்று. அவனது தாடி நீண்டு, மெல்லியதாய், நரை ஓடி வளர்ந்தது. அவனது உற்சாகம் ஒழிந்து போய்விட்டது. அவன் கூனிக்குறுகிப் போனான். அவன் நடையிலே தளர்ச்சி காணப்பட்டது. அவன் அதிகமாகப் பேசுவதில்லை. ஒருபோதும் சிரிப்பதில்லை, ஆனால் அடிக்கடி பிரார்த்தனை செய்தான் அவன்.