பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

டால்ஸ்டாய் கதைகள்

சொல்லியே தீர வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் அல்ல. என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் ஆதிக்கத்தில் இருப்பவன்” என்றான் அவன்.

கவர்னர் எவ்வளவோ முயன்றும் முடியாது போயிற்று. அக்ஸனோவ் அதிகப்படியாக எதுவும் பேசவேயில்லை. ஆகையினால் அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட நேர்ந்தது.

அன்று இரவில் அக்ஸனோவ் படுக்கையில் கிடந்து கண் அயரும் சமயத்தில் யாரோ மெதுவாக வந்து படுக்கை மீது உட்காருவதை உணர முடிந்தது. இருளினூடு உற்று நோக்கிய போது, அப்படி வந்தவன் மகார் தான் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

“இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்? நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று அக்ஸனோவ் கேட்டான்.

மகார் செமினிச் மெளனமாக இருந்தான். ஆகவே அக்ஸனோவ் எழுந்து உட்கார்ந்து பேசினான். “உனக்கு என்ன வேண்டும்? இங்கிருந்து போய் விடு. இல்லாவிடில் காவல்காரனைக் கூப்பிடுவேன்” என்றான்.

அக்ஸனோவை நெருங்கிக் குனிந்தவாறு மகார் முணுமுணுத்தான் “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்து விடு” என்று.

“எதற்காக?” என்று கேட்டான் அக்ஸனோவ்.

“அந்த வியாபாரியைக் கொன்று, கத்தியை உன் பைக்குள் மறைத்து வைத்தவன் நான்தான். நான்