பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

151

உன்னையும் ஒழித்துவிட எண்ணினேன். ஆனால் வெளியே ஏதோ சத்தம் கேட்கவும், கத்தியை உன் பைக்குள் திணித்து விட்டு, ஜன்னல் வழியாக நான் தப்பி ஓடிவிட்டேன்.”

அக்ஸனோவ் பேசவில்லை. என்ன சொல்வது என்றே தோன்றவில்லை அவனுக்கு.

மகார் செமினிச் படுக்கையிலிருந்து கீழிறங்கி, தரை மீது மண்டியிட்டபடி பேசினான்: “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்துவிடு. கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக நீ என்னை மன்னித்துவிடு. அந்த வியாபாரியைக் கொலை செய்தவன் நான்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டு விடுகிறேன். நீ உன் வீடு போய்ச் சேரலாம்.”

“இப்படிப் பேசுவது உனக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் உனக்காக நான் இந்த இருபத்தாறு வருடகாலம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இனிமேல் நான் எங்கே போக முடியும்? என் மனைவி செத்துப் போனாள். என் மக்கள் என்னை மறந்து விட்டார்கள். எனக்குப் போக்கிடம் எதுவுமே இல்லை” என்று சொன்னான் அக்ஸனோவ்.

மகார் செமினிச் எழுந்திருக்கவே இல்லை. அவன் தரைமீது தன் தலையை மோதிக்கொண்டு அழுதான். “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்துவிடு. அவர்கள் என்னை கசையினால் அடித்து நொறுக்கிய போது கூட எனக்கு இவ்வளவு கஷ்டமாக இல்லை. இப்போதைய நிலையில் உன்னைப் பார்க்கும் போதுதான் என்னால் சகிக்கமுடியவில்லை. என்றாலும் நீ எனக்காக இரக்கப்பட்டாய். என்னை நீ காட்டிக் கொடுக்கவே இல்லை.