பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

டால்ஸ்டாய் கதைகள்

நான் ஒரு அதமன். கிறிஸ்து பேரால் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்து விடு” என்றான்.

அவன் அழுது புலம்புவதைக் கேட்டதும் அக்ஸனோவுக்கும் அழுகை பொங்கி வந்தது. அவன் சொன்னான்: “கடவுள் உன்னை மன்னிப்பார். பார்க்கப்போனால் நான் உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு மோசமானவனாக இருக்கலாம்.”

இவ் வார்த்தைகளைச் சொன்னதும் அவன் உள்ளத்தின் சுமை கரைந்தே போயிற்று. வீட்டுக்குப் போகவேணும் எனும் ஆசை கூட அவனை விட்டுப்போய்விட்டது. சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்கிற ஆசை இப்பொழுது அவனுக்கு இல்லவே இல்லை. தனக்கு மரணம் விரைவில் விடுதலை அளிக்கும் என்றுதான் நம்பினான் அவன்.

அக்ஸனோவ் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதிலும், மகார் தான்செய்த குற்றம் பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டு விட்டான். ஆனாலும், விடுதலை உத்திரவு வந்து சேர்வதற்குள் அக்ஸனோவ் இறந்து போனான்.