பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

21


கழுத்துக் காலர் மூடி மறைத்து விட்டபடியால் அவன் பேச்சு நிகிட்டாவின் காதுகளில் ஏறவே இல்லை. அதனால் ‘என்ன?’ என்று கேட்டான் அவன்.

‘ஒரு சமயம் அரைமணி நேரத்தில் நான் பாஷுடினோ போய்ச் சேர்ந்தேன் என்றேன்’ என்று ஓங்கிக்கத்தினான் வாஸிலி.

‘இது அருமையான குதிரை என்பது சொல்லியா தெரியவேண்டும்!’ என்றான் நிகிட்டா.

பிறகு கொஞ்ச நேரம் அவர்கள் மௌனமாக இருந்தனர். ஆனால் வாஸிலிக்கு பேசவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. ஆகவே அவன் அதே பெருங்குரலில் பேசத் தொடங்கினான்.

‘சில்லறை வேலை செய்து பிழைக்கும் அந்த ஆளுக்கு இனி வோட்கா மது கொடுக்கக்கூடாது என்று நீ உன் மனைவியிடம் சொன்னாயா?’ என விசாரித்தான் அவன். அறிவும் அந்தஸ்தும் பெற்ற தன்னைப் போன்ற பெரிய மனிதனோடு பேசுவதனால் நிகிட்டாவுக்குப் பெருமையே உண்டாகும் என்ற நம்பிக்கையோடு அவன் உரத்த குரலில் பேச்சுக் கொடுத்தான். தனது தமாஷில் தானே மகிழ்ந்து போனதால், அந்தப் பேச்சு நிகிட்டாவுக்கு திருப்தி அளிக்காது எனும் உண்மை அவன் மூளையில் புகவே இல்லை. முதலாளியின் வார்த்தைகளை நிகிட்டா கேட்காதபடி காற்று தடுத்து விட்டது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் அதே கிண்டலை மீண்டும் பலத்த தொனியில் தெளிவான குரலில் சொன்னான்.