பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

27

அதை அறிந்த பிறகு அவன் வலது பக்கம் சென்று தேடிப் பார்த்தான். பிறகு வண்டிக்குத் திரும்பி வந்தான். கோட்டுமீது படிந்திருந்த பனியைத் தட்டி உதறினான். பூட்ஸினுள் புகுந்துவிட்ட பனியை வெளியே உலுக்கினான். மறுபடியும் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

‘நாம் வலதுபுறம் தான் போகவேண்டும்’ என்று அவன் தீர்மானமாகத் தெரிவித்தான். ‘முன்பு காற்று நமக்கு இடது பக்கத்தில் அடித்துக் கொண்டிருந்தது. இப்போது என் முகத்துக்கு நேரே வீசுகிறது. அதனாலே வண்டியை வலது பக்கமாகவே விடுங்கள்’ என்று மீண்டும் திடமாக அறிவித்தான்.

அவனுடைய ஆலோசனையை ஏற்று, வாஸிலி வண்டியை வலது பக்கமாகச் செலுத்தினான். எனினும் ரோடு வரவே இல்லை. கொஞ்ச நேரம் அவர்கள் அதே திக்கில் சென்றார்கள். காற்று எப்பொழுதும் போல் கடுமையாகத்தான் வீசியது. பனி லேசாக விழுந்து கொண்டிருந்தது.

‘வாஸிலி ஆன்ட்ரீவிச், நாம் ரொம்பவும் தடம் புரண்டு தட்டுக்கெட்டுப் போனோம் என்று தெரிகிறது’ என நிகிட்டா திடீரென்று குறிப்பிட்டான். ஏதோ சந்தோஷ சமாச்சாரம் சொல்வதுபோல, ஒரு இடத்தில் பனிக்கும் மேலே தலை நீட்டிக் கொண்டிருந்த உருளைக் கிழங்குக் கொடிகளைச் சுட்டிக் காட்டியவாறே அவன் ‘அது என்ன?’ என்று கேட்டான்.

வேர்த்துக் கொட்டிய குதிரையை நிறுத்தினான் வாஸிலி. மூச்சு வாங்கியதனால் அதன் விலாப்புறங்கள் விம்மித் தணிந்து கொண்டிருந்தன.