பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டால்ஸ்டாய் கதைகள்


‘அது என்ன?’

‘அட, நாம் ஸக்கரோவ் நிலத்தின் மேல் நிற்கிறோம். நாம் எங்கே வந்து விட்டோம் பாருங்கள்!’ என்றான் நிகிட்டா.

‘பிதற்றல்!’ என்று எரிந்து விழுந்தான் வாஸிலி.

'பிதற்றல் இல்லை, வாஸிலி ஆன்ட்ரீவிச். இது தான் உண்மை. வண்டி உருளைக்கிழங்கு வயல்மீது சறுக்கிச் செல்வதை நீங்கள் உணரலாம். இங்கே கொண்டுவந்து போடப்பட்ட உருளைக் கிழங்குக் கொடிகள் தான் அதோ குவியல் குவியலாகக் கிடக்கின்றன. ஸக்கரோவ் தொழிற்சாலை நிலம்தான் இது என்று நிகிட்டா விளக்கினான்.

‘அட பாவமே, நாம் எவ்வளவு வழி விலகி வந்து விட்டோம்! இனி நாம் என்ன செய்வது?’ என்றான் வாஸிலி.

‘நாம் நேரே போக வேண்டியது. அவ்வளவுதான். எங்காவது ஒரு இடத்தில்—ஸக்கரோவாவில் இல்லா விட்டால் நிலச் சொந்தக்காரர் பண்ணை அருகில் வெளியேறி விடலாம்.’

நிகிட்டா கூறியதை ஏற்றுக்கொண்டு வாஸிலி அவ்விதமே வண்டியை ஓட்டினான். இப்படி வெகு நேரம் பிரயாணம் செய்தார்கள் அவர்கள். சில சமயம் அவர்கள் வெறும் வயல்கள் மீது செல்ல நேர்ந்தது. அப்போதெல்லாம் நெடுகிலும் பனி மூடிக் கிடந்த மண் கட்டிகள் மேலாக வண்டியின் சறுக்கிகள் இழுபட்டு, கடகட ஓசை எழுப்பிச் சென்றன. சில வேளைகளில் மாரிக்காலத்துப் பயிர் வயல் எதன் வழியாகவேனும், அல்லது தரிசு வயல் மேலாகவாவது போக நேரிட்டது.