பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டால்ஸ்டாய் கதைகள்


‘இப்ப நாம் எங்கே இருக்கிறோம்?’ என்று வாஸிலி கேட்டான்.

‘சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம். வண்டியை விடுங்கள். எங்கேயாவது போய்ச் சேருவோம்’ என்று பதிலளித்தான். நிகிட்டா.

‘ஏன்! இதுதான் கோர்யாச்கின் காடு’ என்று வாஸிலி கூவினான். அவர்களுக்கு முன்னால் பனிக்கு மத்தியில் கறுப்பாகத் தெரிந்த எதையோ சுட்டிக் காட்டினான் அவன்.

அது எந்தக் காடு என்பது நாம் அங்கே போய்ச் சேர்ந்ததும் தெரிந்துவிட்டுப் போகிறது' என்றான் நிகிட்டா.

அவர்கள் கண்ட கறுப்பு வஸ்துவின் பக்கத்தில், வில்லோ மரத்தின் நீண்ட இலைகள் காய்ந்து காற்றில் அடிபட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான். ஆகவே அது ஒரு குடியிருப்பு தானே தவிரக் காடு அல்ல என்பதை அவன் அறிந்து கொண்டான். ஆயினும் அதை வெளியிட அவன் விரும்பவில்லை.

அந்தக் கழிவு நீர் ஓடையைத் தாண்டி இருபத்தைந்து கஜங்கள் கூடப் போயிருக்க மாட்டார்கள். அதற்குள்ளாகவே அவர்களுக்கு முன்னே சில உருவங்கள்—மரங்கள் என்று தோன்றியது—கறுப்பாக நின்றன. புதுரகமான சோகமய ஒலி ஒன்றும் அவர்கள் காதுகளில் விழுந்தது. நிகிட்டா நினைத்தது சரிதான். அது காடு அல்ல. நெடிய வில்லோ மரங்களின் வரிசைதான். இன்னும் உதிராமல் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் இலைகள் தான் காற்றிலே சரசரத்து ஆடின.