பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

டால்ஸ்டாய் கதைகள்


‘கிரெஸ்டியிலிருந்து வருகிறோம்....வாஸிலி............ கொஞ்சம் வெளியே வந்து பாருங்களேன்’ என்று நிகிட்டா பேசினான்.

ஜன்னலுக்குப் பின்னாலிருந்து யாரோ நகர்ந்தார்கள். இரண்டொரு நிமிஷம் கழிந்ததும், நடை பாதையின் வாசற் கதவு திறக்கப்படும் ஓசை வந்தது. பிறகு வெளிக்கதவின் தாழ்ப்பாள் திறந்த சத்தம் கேட்டது. வெள்ளைத் தாடி உடைய நெட்டைக் குடியானவன் ஒருவன் வெளியே எட்டிப்பார்த்தான். கதவு காற்றுக்கு எதிராகத் திறந்து நிற்கும்படி அழுத்திப் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தான் அவன். பண்டிகைக்காக அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் மீது ஆட்டுத்தோல் மேல் சட்டை ஒன்றை அவன் போட்டிருந்தான். அவனுக்குப் பின்னால் சிவப்புச் சட்டையும் பெரிய தோல் பூட்ஸும் தரித்திருந்த சிறுவன் ஒருவன் வந்தான்.

‘ஆன்ட்ரீவிச், நீ தானா அது?’ என்று அந்த வயோதிகன் கேட்டான்.

‘ஆமாம். நண்பரே. நாங்கள் வழியைத் தவற விட்டுவிட்டோம். கோர்யாச்கின் போய்ச் சேருவதற்காகப் புறப்பட்டோம். ஆனால் இங்கே வந்து சேர்ந்தோம். இரண்டாவது முறையாகப் புறப்பட்டுப் போனோம். திரும்பவும் வழிதவறி விட்டோம்’ என்று வாஸிலி சொன்னான்.

‘வழியை விட்டுவிட்டு எப்படியெல்லாம் திரிந்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா!’ என்றான் கிழவன். சிவப்புச் சட்டை அணிந்திருந்த சிறுவனிடம் அவன் சொன்னான், ‘பெட்ரூஷ்கா! போய் வாசலை விரியத்திற’ என்று.