பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

45


‘சரி’ என்று சிறுவன் உற்சாகமாகக் கத்திவிட்டு நடை பாதையை நோக்கி ஓடினான்.

‘ஆனால் நாங்கள் ராத்திரி இங்கே தங்கப் போவதில்லை’ என்று வாஸிலி தெரிவித்தான்.

‘பின்னே இருட்டில் எங்கே போவீர்கள்? இங்கேயே தங்கிவிடுவது தான் நல்லது.’

‘தங்குவதற்கு எனக்கும் ஆசை தான், ஆனால் நான் போயாக வேண்டுமே. அவசரமான தொழில் விஷயம். அதைத் தவிர்ப்பதற்கில்லை.’

‘அப்ப சரி சூடாக ஏதேனும் சாப்பிட்டு விட்டாவது போங்கள். ஸமோவார் இப்பதான் தயாராயிற்று.’

‘சூடாகச் சாப்பிடுவதா? உம். அதைச் செய்யலாம் தான்’ என்று வாஸிலி கூறினான். இருட்டு ஒன்றும் அதிகமாகிவிடாது. நிலா வந்து விடும். அப்புறம் வெளிச்சம் தானே இருக்கும். அதனாலே நாம் உள்ளே போய் உடம்பை உஷ்ணப்படுத்திக் கொண்டு வரலாம். என்ன நிகிட்டா?' என்றான்.

‘சரிதான். ஏன் செய்யக்கூடாது? நம்மை உஷ்ணப்படுக்கிக் கொள்ள வேண்டியது தான்’ என்று நிகிட்டா அங்கீகரித்தான். அவன் குளிரினால் விறைத்துப் போயிருந்தான். அதனால் தனது கைகால்களை எல்லாம் சூடாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வயோதிகனோடு வீட்டுக்குள்ளே போனான். பெட்ரூஷ்கா திறந்து வைத்திருந்த வாசல் வழியாக நிகிட்டா வண்டியை ஓட்டினான்.