பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டால்ஸ்டாய் கதைகள்


‘ஆமாம். அப்படித் தான்’ என்றான் நிகிட்டா.

பெட்ரூஷ்கா சொன்னான் ‘நீ ஒரே அடியாகக் குளிர்ந்து போயிருக்க வேண்டுமே’ என்று.

‘ஆமாம்’ என்றான் நிகிட்டா.

அவர்கள் முற்றத்தைக் கடந்து, நடைபாதை வழியாக, வீட்டினுள் சென்றார்கள்.

4

வாஸிலி ஆன்ட்ரீவிச் வந்து சேர்ந்திருந்த குடும்பம் அந்த ஊரில் மிகுந்த செல்வம் படைத்திருந்த குடும்பங்களில் ஒன்றாகும். அக்குடும்பத்திற்கு ஐந்து பாகம் சொத்து இருந்தது. அது தவிர அதிகப்படியான நிலம் குத்தகை மூலம் சேர்ந்திருந்தது. அவர்களிடம் ஆறு குதிரைகள், மூன்று பசுமாடுகள், இரண்டு கன்றுக்குட்டிகள், இருபது ஆடுகள் இருந்தன.

அக் குடும்பத்தில் இருபத்து இரண்டு பேர் இருந்தார்கள். கல்யாணமான புத்திரர்கள் நான்கு பேர். ஆறு பேரன்மார்கள். (அவர்களில் ஒருவன் தான் பெட்ரூஷ்கா, அவனுக்கு மணமாகி விட்டது.) இரண்டு ‘கொள்ளுப் பேரர்கள்’. மூன்று அநாதைப் பிள்ளைகள் நான்கு மருமகள்மார், அவர்களுக்குக் கைக்குழந்தைகள் உண்டு. பாகம் பிரிக்கப்படாமல் ஒரே குடும்பமாக விளங்கும் ஒரு சில குடித்தனங்களில் அதுவும் ஒன்று. ஆனால், முடிவில் பாகப்பிரிவினைக்கு வழிவைக்கும் விசனகரமான அந்தரங்கப் பிளவு வேலை அந்த வீட்டிலும் ஆரம்பமாகி யிருந்தது. புத்திரர்களில் இருவர் மாஸ்கோவில் தண்ணீர் சுமப்பவர்களாக உழைத்து வந்தனர். ஒருவன் ராணுவத்தில் சேர்ந்திருந்தான்.