பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டால்ஸ்டாய் கதைகள்

உணர்ச்சியோடு அறிவித்தான். ஆண்டவன் அருளால் இந்தக் குடும்பம் நல்ல நிலைமையில் உள்ளது; ஆனால் அவர்கள் தனித்தனியாகப் பிரிந்துவிட்டால் அப்புறம் எல்லோருமே பிச்சை எடுத்துத் திரிய வேண்டியதுதான் என்று சொன்னான் அவன்.

‘மாட்வீவ் குடும்பத்தாரைப் போல்தான்—வீடும் வாசலுமாக அவர்கள் சுகமாக வசித்து வந்தார்கள். ஆனால் பிரிவினை நடந்த பிறகு அவர்களில் யாரிடமும் எதுவுமில்லை’ என்று பக்கத்து வீட்டுப் பெரியவன் தெரிவித்தான்.

‘அந்த நிலைமைதான் நமக்கும் வரவேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாய்’ என்று கிழவன் தன் மகனைப் பார்த்துச் சொன்னான்.

மகன் பதில் பேசவில்லை. இசைகேடான அமைதி நிலவியது அங்கே. அந்த மௌனத்தைக் கலைக்க பெட்ரூஷ்கா முன்வந்தான். வண்டியில் குதிரையை மாட்டிவிட்டு சில நிமிஷங்களுக்கு முன்பே அங்கு வந்து சேர்ந்த அவன் அவர்களுடைய பேச்சை புன்னகையுடன் கேட்டு நின்றான்.

‘இந்த விஷயத்தைப் பற்றி பால்ஸன் வாசகத்தில் ஒரு கதை இருக்கிறது. ஒரு தந்தை தனது புதல்வரிடம் துடைப்பம் ஒன்றைக் கொடுத்து அதைத் துண்டு துண்டாக ஒடித்துவிடும்படி சொன்னான். முதலில் அவர்களால் அப்படிச் செய்யமுடியவில்லை. ஆனால் தனித்தனிக் குச்சியாகப் பிரித்த பிறகு அவர்கள் அதை எளிதில் ஒடித்துவிட்டார்கள். இங்கும் அதே நிலைமை தான்’ என்று சொல்லிவிட்டு அவன் முகத்தில் முழுநகை காட்டினான். ‘நான் தயார்’ என்றும் அறிவித்தான்.