பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டால்ஸ்டாய் கதைகள்


நிகிட்டா ஒன்றும் பேசவில்லை. அவன் காற்றுக்கு நேராக முதுகைத் திருப்பிக்கொண்டு வண்டியில் உட்கார்ந்தான். தனது பூட்ஸைக் கழட்டி, அவற்றினுள் புகுந்து கிடந்த பனித்தூள்களை வெளியே கொட்டினான். பிறகு வண்டியின் அடியிலிருந்து கொஞ்சம் வைக்கோலை உருவி, இடது கால் பூட்ஸில் ஏற்பட்டிருந்த ஓட்டையில் கவனமாகச் சொருகி அடைத்தான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் மௌனமாகி விட்டான். இப்பொழுது அனைத்தையும் நிகிட்டாவின் பொறுப்பில் விட்டுவிட்டவன் போல. நிகிட்டா மறுபடியும் பூட்ஸை அணிந்து, தனது கால்களை வண்டியினுள் இழுத்துக் கொண்டான். பிறகு, கை உறைகளை மாட்டிக்கொண்டு குதிரை வார்களைப் பற்றினான். கணவாயின் ஓரமாகவே குதிரையை நடத்திச் சென்றான் அவன். ஆயினும் அவர்கள் நூறு கஜ தூரம்கூட முன்னேறவில்லை. அதற்குள் குதிரை மறுபடியும் நின்றுவிட்டது. மீண்டும் அதற்கு முன்னால் கணவாய் வந்துவிட்டது.

ஆகவே நிகிட்டா திரும்பவும் கீழே இறங்கினான். மீண்டும் பனியில் கால்களை இழுத்து இழுத்து நடக்கலானான். வெகு நேரம் அவன் இப்படிச் செய்தான். கடைசியில், புறப்பட்டுச் சென்ற இடத்திற்கு எதிர் திசையிலிருந்து வந்து சேர்ந்தான் அவன். ‘வாஸிலி ஆன்ட்ரீவிச், உயிரோடு இருக்கிறீர்களா?’ என்று கூவினான்.

‘இதோ இருக்கிறேன். என்ன ஆயிற்று?’ என்று பதிலளித்தான் வாஸிலி.

'என்னால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே இருட்டாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும்