பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டால்ஸ்டாய் கதைகள்

திருந்த விரலில் கிடந்த தங்க மோதிரம் மின்னும் கையையும், முரட்டுக் கம்பளித்துணியின் கீழேயிருந்து வெளியே நீண்டு கிடந்த வைக்கோலில் சிதறிக் கிடந்த பனியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சிகரெட்டில் நெருப்புப் பற்றியதும் அவன் ஆர்வத்தோடு ஒன்றிரண்டு ‘தம்’ இழுத்து, அனுபவித்து, புகையை மீசையினூடாக வெளியே விட்டான். அவன் மறுபடியும் ‘தம்’ இழுத்திருப்பான். ஆனால் அதற்குள்ளாக தீ படர்ந்த புகையிலையைக் காற்று பிய்த்துக் கிழித்துச் சுழற்றி முன்பு வைக்கோலை வீசித் தள்ளியது போலவே, விசிறி எறிந்து விட்டது.

எனினும் இந்தச் சிறு ஊதல்கூட அவனை உற்சாகப் படுத்திவிட்டது. ‘ராத்திரிப் பொழுதை நாம் இங்கு தான் போக்கவேண்டு மென்றால் அப்படியே செய்யவேண்டியதுதான்!’ என்று உறுதியாகச் சொன்னான் அவன். ‘கொஞ்சம் இரு. ஒரு கொடிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவன் முன்பு கழுத்திலிருந்து அவிழ்த்து வண்டியில் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்தான். தனது கைஉறைகளைக் கழற்றிவிட்டு வண்டியின் முகப்பில் ஏறி நின்றான். உயரமாக இருந்த சட்டத்தின் உச்சியை எட்டிப் பிடிப்பதற்காக உன்னி நிமிர்ந்து, அங்குள்ள வாரில் இறுகலான முடிபோட்டு கைக்குட்டையைக் கட்டிவைத்தான்.

அந்தக் கைக்குட்டை உடனடியாகவே சட்டத்தோடு ஒட்டிச் சுற்றிக்கொண்டும், திடீரென விடுபட்டு வெளிப்புறமாக நெளிந்தும் நீண்டும், அசைந்து பறந்தும் வெறித்தனமாகக் காற்றில் படபடக்கத் தொடங்கியது.