பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

டால்ஸ்டாய் கதைகள்

என்பது தோப்பின் உண்மையான மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் ஆகும். வாஸிலி ஆன்ட்ரீவிச் கணக்குப் பண்ணிய கிரயத்திற்கே அந்தத் தோப்பு முடிந்துவிடும் என்ற நிலைமை இருந்தது. ஏனெனில், மரங்கள் எல்லாம் அவனுடைய வட்டாரத்திலேயே நின்றன. ஒருவனது வட்டாரத்தில் நிலவும் விலை மதிப்பை இதர பகுதியில் உள்ளவர்கள் தலையிட்டு உயர்த்தி விடக்கூடாது என்று அவன் பக்கத்து ஊர்களில் வசிக்கும் வியாபாரிகளோடு நீண்டகால ஒப்பந்தம் செய்து வைத்திருந்தான். ஆனால், இப்போது நகரத்தில் உள்ள மர வியாபாரிகள் சிலர் அந்தத் தோப்பை விலைபேசி முடித்துவிட முன் வந்திருப்பதாக அவனுக்குச் செய்தி எட்டியது. அதனால், உடனடியாகச் சென்று அந்த விஷயத்தை முடித்துவிட அவன் தீர்மானித்தான்.

ஆகவே, விருந்து முடிந்ததும் அவன் தனது பணப் பெட்டியிலிருந்து எழுநூறு ரூபிள்களை எடுத்தான். அதை மூவாயிரம் ஆக்குவதற்காக, தனது பாதுகாப்பிலிருந்த மாதாகோயில் பணம் இரண்டாயிரத்து முந்நூறு ரூபிள்களையும் சேர்த்தான். நோட்டுகளை அதிகச் சிரத்தையோடு எண்ணிப் பார்த்து, சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, புறப்படுவதற்கு அவசரப்பட்டான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச்சின் வேலைக்காரர்களில் நிகிட்டா என்பவன் மட்டுமே அன்று குடிவெறி இல்லாமல் இருந்தான். அவன்தான் வண்டியில் குதிரையைப் பூட்டுவதற்காக ஓடினான். நிகிட்டாகூட வழக்கமாகக் குடிக்கும் குணம் உடையவன்தான். எனினும் அன்று அவன் குடிக்காமல் இருந்ததற்கு