பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

91

காற்றின் ஒலியும், கைக்குட்டையின் படபடப்பும், வண்டி மீது சாடுகிற பனியின் ஓசையும்தான் ஓயாது நிலைத்திருந்தன.

நிகிட்டா எப்பொழுதும் இருந்தது போலவே உட்கார்ந்திருந்தான். அவன் அசையவுமில்லை; இரண்டு முறைகள் அவனை அழைத்த வாஸிலிக்கு பதில் சொல்லவுமில்லை. வாஸிலி ஆன்ட்ரீவிச் வண்டிக்குப் பின்னால் எட்டிப் பார்த்தபோது நிகிட்டா கனமான பனிப்பரப்பினால் மூடப்பட்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ‘அவன் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. நன்றாகத் தூங்குகிறான் போலிருக்கிறது!’ என்று எரிச்சலோடு முனங்கினான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் மேலும் இருபது தடவைகள் எழுந்தான்; படுத்தான். இரவுக்கு முடிவே கிடையாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒரு முறை அவன் எழுந்து உட்கார்ந்து. சுற்று முற்றும் பார்த்து விட்டு நினைத்தான்: ‘விடிகிற நேரம் வந்திருக்க வேண்டும். எனது கடியாரத்தை எடுத்துப் பார்க்கலாமே. பொத்தானை அவிழ்த்தால் குளிர ஆரம்பித்து விடும். இருந்தாலும், விடியற்காலைப் பொழுது வந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தால், நான் இன்னும் அதிகமான உற்சாகம் அடையக் கூடுமே! வண்டியைப் பூட்ட ஆரம்பித்து விடலாமே.’

விடிவதற்கு உரிய நேரம் அதற்குள்ளாக வந்திருக்க முடியாது என்கிற உண்மையை அவனது உள்ளத்தின் ஒரு பகுதி வாஸிலிக்கு உணர்த்தியது. ஆயினும் அவனுடைய பயம் அதிகம் அதிகமாக வளர்ந்து வந்தது. உண்மையான நிலைமையை அறிய வேண்டும் எனும் அவாவும் இருந்தது;