1. தகடூர் யாத்திரை
அளவற்ற வளமுடன், செழுமையின் சீர்மை எங்கணும் விளங்கத் திகழ்ந்திருந்த காலமொன்று, நம் தமிழகத்திற்கு இருந்ததென்றால், அதனை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டிருந்த ‘சங்ககாலம்’ என்று கூறலாம். சங்ககாலத் தமிழகம் நிலநீர் வளத்துடன் மட்டுமின்றித், தமிழினத்தின் வாழ்வியலிலுங்கூட ஒப்பற்றதாகத் திகழ்ந்திருக்கிறது. இதற்கு, இலக்கியச் சான்றுகள் ஏராளமாக
முடியுடை மூவேந்தரும் தமிழகத்தின் அரசியலைத் தலைமைபூண்டு செவ்விதாக அக்காலத்தே செலுத்தி வந்தனர். அருளும் மறமும் அறமும் திகழ, அவர்களுடைய அன்றைய ஆட்சி, இன்றைக்கு வாழ்கின்ற நாமும் எண்ணிப் பெருமூச்சு விடக்கூடிய உயர்வுடனும் செறிவுடனும் திகழ்ந்திருக்கிறது. மக்கள், உரிமை வீறுடனும் அறநெறித் திண்மையுடனும், பண்பின் பெருமிதத்துடனும் செம்மாந்து விளங்கியிருக்கின்றனர். ‘நாகரிகம்’ என்பதன் உண்மையான ஒரு தன்மையினை உளங்கொண்டு, ஒப்பின்றி வாழ்ந்த அவர்களது சிறப்பியல்புகள்தாம், இன்று நாம் வியப்புடன் கற்றுப் பூரிப்புக் கொள்ளுகின்ற பேரிலக்கியங்கள் பலவற்றின் எழுச்சிக்கும் அடித்தளமாக விளங்கியிருக்கின்றது.
ஒரே அரசின் கீழ்த் தமிழினத்தின் ஆட்சிப் பொறுப்பு அன்று நிலவியதில்லைதான். சிறுசிறு பகுதிகளைப் பற்பல குடியினர் காத்து வந்தனர் என்பதும் உண்மைதான். எனினும், அங்ஙனம் எண்ணற்றவாகப் பரவிக் கிடந்த சிற்றரசுகளுள் ஒவ்வொன்றுமே உயர்வுடன் திகழ்ந்தன என்பதனை நம்மால் மறுக்கமுடியாது. ‘மேலரசு’ என்ற வகையில் மூவேந்தர்களும் நிலவினர் என்பதுடன், நாட்டின் நிர்வாகப் பொறுப்புக் குறுநிலத் தலைவர்களிடமே முற்றவும் பரவிக் கிடந்ததனால், நாட்டின்கண் எங்கணுமே செம்மையான ஆட்சி நிலவி வந்திருக்கிறது.
தமிழறிந்த சான்றோர்கள் பலராகவும், அவர்களைப் போற்றிப் புரந்த வள்ளல்கள் பலராகவும், தமிழன்னையின் செழுமைமணம் எங்கணும் பரவி மலிந்திருந்த பான்மைக்கு, அந்தச் செம்மைசான்ற ஆட்சிமுறைதான் ஒருவகையிற் காரணமாக இருந்திருக்க வேண்டும் எனலாம்.