உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

3


நெடுநாள் வாழ்வினைத் தருகின்ற கருநெல்லிக் கனியைப் பெற்றபோது, தானுண்ணாது, தமிழ்ப் பெருமாட்டியான ஒளவையாருக்கு அளித்து, அவருண்ணக் கண்டு மகிழ்ந்த தகுதியினை உடையவனும் இவன்! இதனாலும் தமிழறிஞர் பலரும் இந்தப்போரினை மிகவும் விழிப்பாகக் கவனிக்கலாயினர்.

இதனால் தகடூர்ப் போரின் நிகழ்ச்சிகள் பலவும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றன. அவற்றை வியந்து பாடினர் பொன்முடியார், அரசில்கிழார் போன்ற சான்றோர்கள். இங்ஙனம் புலவர் பெருமக்களாற் பாடப்பெற்ற இந்தப் போரது வரலாறும் தமிழ்வரலாற்றில் முதன்மை கொண்டதாயிற்று. இவர்களின் செய்யுட்கள் பின்னர்த் தொகுக்கப் பெற்றன. ‘தகடூர் யாத்திரை’ என்னும் பெயருடன் ஒரு தனி நூலாகி, வழிவழி வந்த தமிழறிஞர்கள் பலரானும் வியப்புடன் போற்றப்பெற்றும் வந்திருக்கின்றன.

எனினும், காலக் கொடுமைக்குக் கணக்கில்லை என்றாற்போலத் தமிழிலக்கியங்களுட் பலவற்றைப் போக்கடித்த காலவெள்ளம், தகடூர் யாத்திரையினையும் நமக்கு கிடையாத படி செய்துவிட்டது. கிடைப்பனவெல்லாம் புறத்திரட்டிற் சேர்க்கப் பெற்றுள்ள ஒரு சில செய்யுட்களும், தொல்காப்பிய உரையாசிரியர்களாற் காட்டப்படும் ஒன்றிரண்டு செய்யுட்களும், மற்றும் சிலவுமே யாம்.

இந்தச் செய்யுட்கள் விளங்குகின்ற செழுமையைக் காணும்போது, நம் ஏக்கம் மிகப்பெரியதாகின்றது. முற்றவும் பெறுவதற்குக் கொடுத்து வைக்காமற்போயின கொடுமை நம்மை வாட்டுகின்றது. கிடைத்துள்ள இந்தச் செய்யுட்களையும், இந்தப் போரைச் சார்ந்த பிற செய்திகளையும் ஒருங்கே தொகுத்துத் தந்து தமிழன்பரை மகிழ்விப்பதே இந்த நூலின் நோக்கம் ஆகும்.