பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

5



சேரவரசு இவ்வாறு நிலவிய காலத்திலே, மேலை மலைத் தொடருக்குக் கீழ்ப்பாலதாகிச் சேரவள நாட்டை அடுத்திருந்த கொங்குநாட்டுப்பகுதிகள் பெரும்பாலும் குறுநில மன்னர்களின் ஆட்சிக்குள் விளங்கின. சேரவரசின் மேலாணைக்குட்பட்ட சுதந்தர மன்னர்களாக இவர்களுட் பலர் திகழ்ந்தனர். வேளிர் குடியினர் சிலரும் சேரமன்னர் மரபினர் சிலருமாக இவர்களது குடிப்பிறப்பு இருந்திருக்கிறது. போர் நிகழ்ச்சிகளுள், இத்தலைவர்கள் தம்முடைய மேலரசாகிய சேர நாட்டிற்குத் துணை செல்வதும், அவர்கட்காகப் படைத் தலைமை பூண்டு போரிற் கலந்துகொள்வதும் இயல்பாக இருந்தன.

தகடூர்ப் போர்க்காலத்தில், சேரவரசு கொங்குப் பகுதிக்கண் பெரிதும் பரவியிருந்தது. கொங்குப்பகுதியின் கோநகராகக் கொங்கு வஞ்சி என்னும் பேரூர் விளங்கிற்று. இந்நாளில் தாராபுரம் என வழங்கும் ஊர்தான் கொங்கு வஞ்சியாகத் திகழ்ந்திருந்தது என்பர் தமிழறிஞர். இந்தக் கொங்கு வஞ்சியின்கண் வீற்றிருந்தது. கொங்கு நாட்டுப் பகுதியையும், பொறைநாடு கடுங்கோநாடு போன்ற பகுதிகளையும் அரசியற்றி வந்தவர் சேரர் குடியினருள் ஒருசாரார். இவர்களுட் சிறந்தவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன். கபிலர் பெருமானால் பாடப்பெற்ற பெருஞ்சிறப்புடைய இவன், தன்னுடைய பேராண்மையாலும் பிற பண்பு நலங்களாலும் அந்நாளில் மிகவும் சிறப்புடன் விளங்கி வந்தனன், இவனுக்குப் பின்னர் அரசுகட்டி லேறியவன்தான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன்.

இவன் காலத்தில் கொங்கு நாட்டின் வடக்கில் புன்னாடும் எருமை நாடும் விளங்கின; கிழக்கில் தொண்டைநாடும் சோழநாடும் இருந்தன; தெற்கிலும் மேற்கிலும் சேரநாடு எல்லையாக அமைந்திருந்தது.

கொங்கு நாட்டின் கோயம்புத்தூர்ப் பகுதி மீகொங்கு நாடு என வழங்கி வந்தது; குளித்தலையும் அதன் தென் மேற்குப் பகுதியும் கீழ்க்கொங்கு நாடெனவும், சேலம் பகுதி வட கொங்கு நாடெனவும் பெயர் பெற்றிருந்தன.

இந்தப் பகுதிகளுள் சேலமாவட்டத்துத் தகடூர்ப் பகுதியை அரசியற்றி வந்தவர் அதிகமான்கள் என்னும் மரபினர். இவர்கள் சேரர் கிளையினைச் சார்ந்த ஒரு குடியினரே என்பர். பேராண்மையிற் சிறந்த வீரர்களாகவும் பெரும் படைத் துணையினைப் பெற்றிருந்தவர்களாகவும் இவர்கள் விளங்கினர்.