பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

7


இதே சமயம், பரவிவரும் சேரப் பேரரசை நினைந்து வேதனை கொண்டிருந்த சோழர்கள், தம் மேலரசுக்கு உட்பட்ட மலையமான், தம் நண்பனாக விளங்கியவனும், சேரரது நாடாசைக்குத் தடைக்கல்லாக நின்றவனுமான கொல்லிக் கோமானை அழிக்கத் துணைசெய்த அநீதிகண்டு பொருமி யிருந்தனர். அதிகரும் சோழரும் மலையனை ஒழிப்பதிலும், சேரரின் நாடாசைக்கு முடிவுகட்டுவதிலும் தமக்குள் ஒத்துழைப்பதென்று முடிவு செய்தனர். இந்த முடிவின்படி நிகழ்ந்த திருக்கோவலூர்ப் பெரும்போரிலே மலையமான் வீழ்ந்தான்; அவர் வலிமை முற்றவும் அழிந்தது.

மலையமானின் சிறந்த வள்ளன்மையைக் கபிலர் பெருமான்,

நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்
பாட்டான் றிரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே

(புறம் 24)

என்று பாடுவர். இத்தகைய மலையமான், தன்னுடைய படையாண்மை காரணமாகத் தனக்கொரு நிலையென்பது யாதுமின்றிச் சோழர்க்குத் துணையாகியும், சேரர்க்குத் துணையாகியும், அதனாற் பெறுகின்ற பெரும்பொருளே தனக்குக் குறிக்கோளாகக் கொண்டமையின், இப்படி முடிவில் அழிவெய்தினான்.

அதிகனது இந்தக் கோவலூர் வெற்றியை ஒளவையார் போற்றிப்பாடுவர்- (புறம் 99) அதன்கண் முரண் மிகு கோவலூர் நூறிநின் அரணடு திகிரி யேந்திய தோளே என அவன் தோளாற்றலைப் பாராட்டும் ஒளவையாரின் சொற்கள், கோவலூர்ப் போரின் கடுமையினை ஒருவாறு காட்டுவதாகும். முடிவிற் கோவலூர் சோழர் வசமாகியதும் தகடுர் அதிகமான்கள் சற்று மனநிம்மதி பெறலாயினர்.

இதனிடையே, தொண்டையர் கோமானுக்கும் அதிகமானுக்கும் எல்லைத் தகராறுகள் பல கிளைத்தன. அதிகமானை அழித்துவிடத் தொண்டைமான் முனைந்தான். ஒளவையாரின் தலையீட்டினால் இவ்விருவர்க்கும் நேரவிருந்த பெரும்போர் சமாதானத்தில் முடிந்தது. இங்ஙனம், தொண்டைமான் போரொழித்துச் சமாதானமாகிவிடச் சேரர்கள் மனம் வருந்தினர்.

இஃதன்றியும், எழுவர் குறுநில அரசர்கள் தகடூர் அதிகமான் மீது பகைமை கொண்டனர். அவனை அழிக்க முயன்று,