பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தகடூர் யாத்திரை


படையெடுத்து எதிர்த்தும் சென்றனர். இந்தப் போரின்கண்ணும் வெற்றி அதிகமானுக்கே வாய்த்தது. எழுவரது வலிமையும் அழிந்து ஒழிந்தது. இதனைச் ‘செருவேட்டு, இமிழ்குரன் முரசின் எழுவரொடு முரணிச் சென்றமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை’ என வரும் ஒளவையார் வாக்கினால் அறியலாம் - (புறம் 99)

இவ்வாறு, தம்மைப் பகைத்த பலரையும், வென்று. பகையின்றிச் செருக்குடன் திகழ்ந்தனர் அதிகமான்கள். சோழரது நட்பும் அவர்கட்கு இருந்தது. இந்தச் சூழ்நிலையில், சேரரது ஆத்திரம் நாளுக்குநாள் மிகுதியாகிக் கொண்டு போயிற்றே யொழியக் குறைவதாயில்லை. தாம் நேரிற் சென்றே தகடூரைக் கைப்பற்றிவிடல் வேண்டுமென்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர்.

இந்த முடிவிற்கு அவர்கள் வந்ததன் பின்னர், அதனைச் செயற்படுத்தத் தகுதியான ஒரு சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அது, காமூர்த்தலைவனான கழுவுள் என்பவனின் குறும்போடு வந்து கொண்டும் இருந்தது.

முசிறிப் பகுதியிலிருக்கும் திருக்காம்பூர் அக்காலத்தே காமூர் என வழங்கிற்று. அதன் தலைவனாக விளங்கியவன் கழுவுள் என்னும் ஆயர்குல தலைவன். கொங்கு நாட்டிலே சேரரது செல்வாக்குப் பெருகி வருவதறிந்து கவலை கொண்ட வருள் இவனும் ஒருவன். இந்தப் பகைமை காரணமாகத் தகடூர் அதிகமானின் நட்பும் ஆதரவும் இவனுக்குக் கிடைப்பதாயிற்று. அந்த ஊக்கத்தால் இவன் தென்கொங்கு நாட்டின் பல பகுதிகளுட் புகுந்து நிரை கவர்ந்தும் கொள்ளையிட்டும் கொடுமைகள் பலவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தான்.

கழுவுளின் செயலால் ஆத்திரங்கொண்ட அந்தக் கொங்குப் பகுதிகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். பதினால்வர் கூடிச் சென்று காமூரை முற்றுகையிட்டுத் தீக்கிரையாக்கிக் கழுவுளின் செருக்கைத் தொலைத்தனர். கழுவுள் தோற்றுத், தகடூர் நாட்டையடுத்துள்ள மலைப்பகுதிக்குத் தன்னைச்சார்ந்தாருடன் ஓடிவிட்டான்.

கொல்லிக் கூற்றத்து ஓரியை அழித்துவிட்டபின், அது சேரவரசுடன் சேர்ந்து, வலியற்ற ஒரு தலைவனின் கீழ் விளங்கியது கழுவுளுக்கு வசதியாக இருந்தது. அத்துடன், அதிகமானின் நண்பர்களான வேளிர்குலத் தலைவர்கள் சிலரும், சேரர்மீது பகைமை கொண்டிருந்தமையால் கழுவுளுக்கு