பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

9


ஊக்கமும் உதவியும் நல்கி வந்தனர். இதனாற் கழுவுள், கொல்லிக் கூற்றத்தைக் தன்வசமாக்கிக் கொண்டு, அங்கு நின்றிருந்த சேரரது காவற்படையினை அழித்தும் விட்டான்.

கழுவுளது இந்தச் செயல் எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் வார்த்தது போலாகச், சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை, கழுவுளைப் பெரும்படையுடன் அழிப்பது கருதிப் புறப்பட்டுவிட்டான்.

கழுவுளுக்கு உதவிநின்ற வேளிர்கள், கடலென வந்து கொண்டிருந்த சேரப் பெரும்படையைக் கண்டதும், பகை துறந்து, பணிந்து போயினர், கழுவுள் கோட்டைக்குள் அடைத்துக் கிடந்தான். சேரமான் கோட்டையை முற்றுகை யிட்டுக் கடுமையான தாக்குதலை நிகழ்த்தச் செய்கையறியாது திகைத்த கழுவுள், தன் அழிவுக்குக் காலம் வந்ததை உணர்ந்து கொண்டான். அழிவது அல்லது இரும்பொறையைப் பணிந்து வாழ்வது என்னும் இரண்டனுள் ஒன்றைத் தெரிந்துகொள்ளும் நெருக்கடி ஏற்பட்டது. முடிவில், பணிவதையே தெரிந்து கொண்ட கழுவுள், தனியனாகிச் சென்று இரும்பொறையைப் பணிந்து நிற்க, அவனும், கழுவுளை மன்னித்துத் தனக்கு அடங்கியவனாகி வாழ்வதற்கு இசைவளித்தான்.

இதன்பின், அதிகமான் ஒருவன்தான் சேரர்க்குப் பகையாக எஞ்சிநின்றான். தகடூர் நாடு தவிர பிறவனைத்தும் சேரரது காவலுக்கு உட்பட்டவாயின. அதிகமான், இதனால் தளர்ந்து விட்டானில்லை. தன் உரிமையைக் காத்தற்குப் போரிடவே முனைந்து நின்றான்.

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படையெழுச்சியின் எல்லைக்கண்ணும் தகடூரைக் கைப்பற்றுவது ஒன்றுதான் எஞ்சி நின்றது. அதனை வென்றன்றி மீள்வதில்லை என்ற உறுதியுடன், தக்க வாய்ப்பினைக் கருதியபடி, அவன் தகடூர் எல்லைக்கண் பாடியமைத்து அவ்விடத்தையே தங்கிவிட்டான்.

தகடூர்ப் போருக்கான சூழ்நிலைகள் பலவும் இவ்வாறாக வந்து ஒன்றுகூடி நின்றன. ‘போர் எப்பொழுது நேரப்போகிறதென்ற’ ஒன்றுதான் எஞ்சியிருந்தது. இங்ஙனம் உருவாகிய ஒரு சூழ்நிலையினை மனத்தே கொண்டோமானால், தகடூர் யாத்திரையின் சிறப்பிற்கான காரணமும் நமக்கு நன்கு விளங்கும்.

இனி, இந்தப் போரின்கண் எதிர்த்து நின்ற உழிஞையாரான சேரத்து தலைவனான பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியும், நொச்சியாரான தகடூர் மன்னன் அஞ்சியைப் பற்றியும் அறிந்து கொண்டு, மேற்கெல்வோம்.