புலியூர்க் கேசிகன்
11
நெடுஞ்சேரலாதற்கு மனைவியாகி இருந்தனள் எனவும், அவள் மக்களாகத் திகழ்ந்தவர் களங்காய் கண்ணி நார் முடிச்சேரலும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும் எனவும், மற்றொரு மகளே செல்வக் கடுங்கோவின் மனைவியாகத் திகழ்ந்த சிறப்பினள் எனவும், சங்கநூற் செய்திகளால் நாம் அறிகின்றோம். இவன் மகன் தான் இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன்.
ஆசிரியர் பெருங்குன்றுர்க் கிழார் பாடிய ஒன்பதாம் பதிற்றுப்பத்து, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிக் கூறுவதாகும். அதன் பதிகம், 'குட்டுவன் இரும்பொறைக்கு மையூர்கிழான் வேண்மாள் அத்துவஞ் செள்ளை ஈன்ற மகன்’ என அவனைக் கூறுகின்றது. இந்தக் குட்டுவன் இரும்பொறை என்பானைப் பெருஞ்சேரல் இரும்பொறையாகவே கொண்டு, இவன் மகனே இளஞ்சேரல் என்பார் சிலர். அங்ங்னமாயின், இவன் மனைவியாவாள், மையூர்கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஆகலாம். அன்றிக் குட்டுவன் இரும்பொறையினை இவனினும் வேறாக இவன் தம்பியாகக் கொள்வாரும் உளர். அங்ங்னமாயின், இவன் மனைவி பற்றி எதுவும் அறிவதற்கில்லை என்று தான் நாம் கூறுதல் வேண்டும்.
இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை இளமைக்கண் சிறந்த போர்வீரனாகப் பயிற்சிபெற்று உயர்வுற்றதுடன் மட்டுமல்லாது, சிறந்த தமிழறிந்த சான்றோனாகவும் திகழ்ந்திருக்கின்றனன். இதற்கு இவனுடைய தகப்பனான செல்வக் கடுக்கோவது அவையிடத்திருந்த சான்றோரான கபிலர் பெருமான் போன்றோரது துணையே காரணமாயிருந்திருக்கலாம்.
இவனுடைய தமிழ்ப்பற்று தமிழை அறிந்து அதன் இனிமையினை நுகர்ந்து களிப்பதுடன் மட்டுமே அமைந்து விடவில்லை; தமிழறிந்த சான்றோரைப் போற்றிப் புரந்து பேணி தண்ணளிகொண்ட செயலாகவும் மலர்ச்சியுற்றிருந்தது. இந்தச் செவ்வியை விளக்குவனவாக இரண்டு சம்பவங்கள் இலக்கியங்களுள் கூறப்படுகின்றன.
ஒன்று, முரசுக்கட்டில் அறியாதேறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயிலெழுந்துணையும் கவரி கொண்டு வீசியது; மற்றொன்று, தன்னைப் பாடிய அரிசில் கிழாருக்குத், 'தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று, கோயிலுள்ள வெல்லாம் கொண்மின்' என்று காணம் ஒன்பது நூறாயிரத் தோடு அரசு கட்டிற் கொடுத்த அந்த அருமையுடைய செயல்.