பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தகடூர் யாத்திரை


இவற்றுள் முன்னதை மோசிகீரனாரின், ‘மாசற விசித்த’ என்னும் புறப்பாட்டால் (புறம் - 50) நாம் அறியலாம். வெற்றி முரசம் வீற்றிருக்கின்ற, நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கையிடத்தே, அதன் தகைமையறியாது ஏறிப்படுத்திருந்தார் மோசிகீரனார். அதனைக் கண்ட இரும்பொறை முறைப்படி வெட்டிக் கொன்றானில்லை. சினந்து அவரைப் பிறவாற்றால் தண்டித்தானும் இல்லை. இவையாயினும், அவன் நற்றமிழ் முழுதறிந்த தன்மையனாதலின் பொறுத்தனன் எனக் கொள்ளற் பாலன. ஆனால் அவனோ, அதனோடும் அமையாது, அணுகவந்து தன் மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென வீசியும் நின்றனன்! செயற்கரிய செயல் அது! அறநெறியின் முறைமையைக் கூடத் தமிழறிந்த சான்றோரின் அறியாமையைக் கருதி மறந்துவிட்ட செயல் அது! எனினும், தமிழன்பில் தலைசிறந்த மன்னன் அவன்! அதனால், அவன் செயல் தமிழோடு கலந்து, பிறவற்றை எல்லாம் கடந்து பெருமைபெற்று உயர்கின்றது! தன்னையும், தன் பொறுப்பையும், தன் கடமையையும் நினைக்க மறந்தவனாக, உறங்கும் தமிழறிஞரின் உறக்கத்தை கலையவிடாது தண்ணென வீசிநின்றான் அவன்! பெருஞ்சேரல் இரும்பொறை, அதனால் பெருந்தமிழ் இரும்பொறையும் ஆகி, விளங்கு புகழுடன், தமிழுள்ளவரை வீற்றிருக்கும் தகுதி கொண்ட சால்பினனும் ஆகிவிடுகின்றான். இதனைக் கண்டு வியந்து பாடினார் மோசிகீரனார்; ஆனால் அவர் செய்யுளைக் கற்கும் பொழுதெல்லாம் நாமும் வியந்து அவனைப் போற்றுகின்றோம். தமிழறிந்தாரை ஆட்சித் தலைவர்கள் மனங்கனியப் போற்றிப் புரந்துவந்த அந்தப் புகழமைந்த பொற்காலத்தின் நினைவு, நம்முள், தமிழறிந்தார்க்கு இன்றைய ஆட்சித் தலைவர்கள் தருகின்ற மதிப்பின் குறை பாட்டைக் கண்டதும், மேலும் உயர்வுடைய ஒரு பெருஞ்செயலாகி நிலைபெறுகின்றது.

இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறையின் மற்றொரு செயலும் இங்ங்னமே வியப்பிற்கு உரியதாகும். வளமான தமிழறிஞர்க்கு வாரிவழங்கிய வள்ளல்களின் செயல்களைக் காட்டினும், இவனுடைய அளப்பரும் தமிழ்க் காதற் செல்வி நம்மை மெய்சிலிர்க்கச் செய்வதாக விளங்குகின்றது.

பதிற்றுப் பத்துள் எட்டாம்பத்து, இவனை ஆசிரியர் அரிசில்கிழார் பாடியதாக அமைந்திருப்பது. அந்தப் பத்துச் செய்யுட்களையும் பாடிய அரிசில் கிழாருக்கு இவன் அளித்த பரிசில் யாது தெரியுமா? அதனைப் பதிகம் கூறுகின்றது.