பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

17


அதிகமான் எழினியைச் சேரமான் வென்றான் எனவுரைப்பதன் பொருளாகலாம் எனவும் கொள்வார்கள் சிலர். இது ஒரளவு உண்மையாக இருக்கக்கூடியதே யாகும். போரினது கடுமையோடு, இருசாராரும் தகுந்த முன்னேற்பாடுகளுடனும் வலிமையுடனும் திகழ்ந்தனராதலின், போர்க்காலம் ஒரு சில ஆண்டுகள் வரை நீடித்திருந்தமையும் பொருந்துவதே.

தகடூர் அதிகமான்களுள் நாம் சிறப்பாக அறிதற்குரிய சிறப்பினனாகத் திகழ்பவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்றோம். இவனுக்கு முற்பட்டவர் யாவரென்பதனை நாம் அறிதற்கில்லை. இவன் மகன் பொகுட்டெழினி என்பதும், இவன் அத்தை மகள் நாகந்தையார் என்பவர் சிறப்புத் தமிழ்ப் புலமையுடன் திகழ்ந்தனர் என்பதுமே இவன் குடும்பத்தைப் பற்றி நாம் அறியக் கூடியனவாக உள்ளன.

அதிகர் மரபினருள் ஒருவனைப் பற்றிச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தும் நாம் கேள்விப்படுதலால், பொகுட் டெழினிக்குப் பின்னரும், இந்தக் குடியினர் தகடூர்ப் பகுதியை ஆண்டு வந்தனர் என்பதனையும், அவர்களின் ஆட்சி அதிகமான் அஞ்சிக்குப் பின்னரும் நெடுங்காலம் நிகழ்ந்துவந்த ஒன்றென்பதனையும் நாம் அறிகிறோம்.

‘அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி’ என்பானை அரிசில்கிழார் பாடிய பாட்டு என வழங்கும் புறநானூற்று 230ஆவது பாடல், தகடூர்ப் போரின்கண் வீழ்ந்தானை எழினி’ எனக் குறிக்கின்றது. இவனை, நெடுமான் அஞ்சிக்கு தகப்பன் எனக் கொள்வாரும் உளர். இவனே நெடுமான் அஞ்சி என்பாரும் பலர். இப்படிக் கொள்ளுதலே பொருந்துவதாகவும் உள்ளது.

'பெற்ற தாயால் கைவிடப்பட்ட உண்ணாத குழவியைப் போல, அவனைச் சார்ந்திருந்த சுற்றம் இடந்தோறும் இடந்தோறும் வருத்தமிகுதியான் கதறிக் கொண்டிருந்தன. பசியால் வருத்தமுற்றவையாய்க் கலக்கமுற்றும் நலிந்தன. துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு அவனை இழந்து கிடந்த விதனத்தின் கொடுமையோ மிகவும் பெரிதாயிருந்தது.

'கூற்றமே! அறமில்லாத கூற்றமே அவர்களது இழப்பினும் காட்டில் நீதான் பெரிதான இழப்பினை உடையை ஆவாய். வாழ்தல் ஏதுவாக வரும் வயலிடத்து விளையும் வருவாயை அறியாதானாக, தளர்ந்த குடியையுடைய உழவன் ஒருவன், விதையைக் குற்றி உண்டாற்போல இந்த எழினியது பெறுதற்கரிய உயிரினை நீயும் உண்டு விட்டனையே!’