பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

81


தடுத்து நிற்கும் மறவர்கள் அவற்றைக் காத்து நின்றனர். இவற்றுள் சில பகைவர்க்கு வீழத் தொடங்கி விட்டன. மிகவும் கடுமையான போருக்குப் பின்னரே அவை வீழ்ந்தன. அவற்றைக் காவல் பூண்டிருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் இறுதிவரை உயிரையும் பேணக் கருதாத உறுதியுடன் நின்று போரிட்டனர். புரிசைகள் பல இப்படி அடுத்தடுத்து வீழக் காவற்காட்டுள் அங்கங்கு நிறுவப்பெற்றிருந்த பலப்பல காவல் ஞாயில்களும் சரியத் தொடங்கின. கோட்டையைச் சார்ந்த அகழியிடத்தே நடந்த போரோ மிகமிகக் கொடிதாக இருந்தது. அகழைக் கடக்க முயன்ற சேரநாட்டு மறவரும், அவரைத் தடுக்கமுயன்ற தகடூர் மறவரும், தத்தம் தறுகண்மையில் மேலோங்கி நிற்பாராயினர். இரு திறத்தாரும் ஒருவரை நோக்கி மற்றவர் எய்த கணைகளின் பெருக்கமோ சொல்லி முடியாது. கணைகளின் பெருக்கத்தால் அகழியே சில இடங்களில் தூர்ந்து போயிற்று என்றால், அங்கு நிகழ்ந்த போரின் தன்மையினையும், அதனிடத்து வீழ்ந்த தமிழ் மறவரின் பெருக்கத்தையும் எவ்வாறு கூறுவது! வளத்தால் எங்கணும் கொழுமை மல்கத் திகழ்ந்த தகடூர்ப் பேருர், இப்படிச்சூழவும் அழிபாடுற்றுக்கிடந்தது. மறவர்களின் வாளொலியும், போர்க்களத்துப் பிறபிற ஆரவாரங்களுமே எப்புறமும் நிலவின. - - - இந்த நிலையிலே களத்தே விழுப்புண்பட்டான் ஒரு வீர மறவனை, புண்ணுக்கு மருந்திட்டவராக, அவன் இல்லத்தார் பேணிக் காத்து வருகின்றனர். பேய்க் குற்றம் ஏற்பட்டு அவன் இறந்துபோய்விடக் கூடாதென்று கருதி வேம்பும் வெண் சிறுகடுகும் தூவியுள்ளனர். கருமையான தழையினையுடைய நொச்சி மாலையினைச் சூடியவனாகத் திருந்திய வேலினை யுடைய அவன் ஆற்றிய போர்ச்செயல்களைப் பலரும் வியந்து பேசுகின்றனர். - - . . இப்படித் தொடர்ந்து பலகாலும் நிகழ்ந்து வந்த போரினாலே ஏற்பட்ட இழப்புக்கள், தகடுரார்க்கு மிகுதியாக இருந்தன. அவற்றை எண்ணி அவர்கள் வருந்திய வருத்தமும் மிகுதியாயிருந்தது. மக்கள் பலருமே வருந்துவார் ஆயினர். ஆரவாரத்தாலும் வளத்தாலும் சிறந்து விளங்கிய தகடூர் நகரம், களத்தே பட்டாரை நினைத்துக் கரைந்து புலம்பும் அவர்தம் உற்றாராலும், களத்தே விழுப்புண்பட்டு வந்தாரைப் பேணிக் காத்துவரும் உறவினராலும், எங்கணுமே சோகம் நிலவுகின்ற ஒரு தன்மையினையும் பெற்றது. -