பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

103


வாடவில்லை; பசுமை வெளுக்கவில்லை. 'போயும் நாளாச் சோல்லியோ? ஆசையாய் இருந்திருக்கும்; பார்க்கணும் போல; வந்திருக்காள்” என்று தன்னையே தேற்றிக் கொண்டாள். மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் ஒரு பெண். ருக்குவின் தந்தை அந்த ஆசையில் மேம்போக்காக இருந்துவிட்டார். "ஏன், அவன் வரவில்லையா?” என்று ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்பது போலக் கேட்டார்.

“லீவு கிடைக்கல்லே அப்பா” என்றாள் ருக்கு. அந்தக் குரலில் வேற்றுமை ஒன்றும் புலப்படவில்லை. சாதாரணமாய்த்தான் சொன்னாள். ஆனாலும்

சிலுசிலு என்று சிறுகாற்று ஒன்று வீசி விட்டுப் போயிற்று.

ஆனாலும்-? ஒரு சிறு சந்தேகம். "ஏண்டா ரங்கா , மாப்பிள்ளை எப்படிடா இருக்கார்? ஏதாவது-” என்று ரங்கனைத் தனியாக வந்து கேட்டாள்.

"மாப்பிள்ளைக்கு என்ன?” என்றான் ரங்கன், கொஞ்சம் இரைந்தே. மேலே ஓடவில்லை தங்கம்மாளுக்கு. 'ஏதாவது இவர்களுக்குள் சண்டையா என்று கேட்கவேண்டும். இவனிடம் போய் எப்படிக் கேட்பது?'

"அதுக்கில்லையடா, ஏதாவது சொன்னாரான்னு...”

"ஓஹோ..... எவ்வளவோ சொன்னார். ரேஷன் கஷ்டம், ஆபீஸ் வேலை, இண்டியன் யூனியன்......

“உன்னை வந்து கேட்கிறேனே, என்னைச் சொல்லு!" என்று திரும்ப வேண்டியதாயிற்று.

ருக்கு தினமும் காபி சாப்பிட்டாள். பத்திரிகை ஒன்றை வைத்துக்கொண்டு அப்பாவுக்கு எதிர்த்தாற்போல உட்கார்ந்து ஏதோ சிறிது மல்லுக்கு நின்றாள். தலைவாரிப் பின்னிக் கொண்டாள். ஆர அமர, மொர மொரக்கக் குளித்தாள்; சாப்பிட்டாள். கலகலவென்று பேசினாள்; சிரித்தாள். குத்துவிளக்கைத் துலாம்பரமாகத் துடைத்து ஏற்றிக் கும்பிட்டாள்; பாடினாள். கும்மாளமாகத்தான் இருந்தாள். ஆனால்-

வேணுவிடமிருந்து எப்போதாவது கடிதம் வரும். தங்கம்மாளுக்குப் பரபரப்பாய் இருக்கும். ருக்குவின் முகத்தில் மாறுதலே ஏற்படாது.

"என்னடி?"

"எல்லாம் சௌக்கியந்தான்.”

“அதென்ன, அப்படி அசுவாரசியமாய்ச் சொல்றே?” ருக்குலின் தந்தை வரும்படி வருகிற வக்கீல். ஆனால் பெண்ணுக்குப் பீஸ் இல்லாமல் வக்காலத்து வாங்கிக் கொள்வார்.

"இதெல்லாம் உனக்கென்னடி? சுவாரசியத்தையும் அசுவாரசியத்தையும் ரொம்பக் கண்டவள் மாதிரி! விசேஷம் இருந்தால் சொல்லமாட்டாளா?”